» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பேருந்து மோதி கோர விபத்து : 11 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு!

வெள்ளி 20, மார்ச் 2026 3:41:14 PM (IST)



சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் பகுதியில் இன்று நிகழ்ந்த கோர விபத்தில், அரசுப் பேருந்து மோதி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சுமார் 30 பயணிகளுடன் இன்று மதியம் 12 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. உத்தமசோழபுரம் அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் திடீரென பழுதடைந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓடி எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் (டிப்பர் வேன்) மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், சரக்கு வாகனத்தில் வந்த சிறுமி, 11 மாத குழந்தை மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், டிப்பர் வேனில் வந்து படுகாயமடைந்த 4 பேர் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு:

விபத்து நடந்தவுடன் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், விபத்துக்குக் காரணமான அரசுப் பேருந்தை அடித்து நொறுக்கினர். இதனால் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொண்டலாம்பட்டி போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory