» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் அவர், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிடோரையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பேசுகையில், "நன்றி மறப்பது நன்றன்று என இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. நன்றியைப் பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத அவர் பேசுகிறார்.

அதிமுகவை காப்பாற்றியது பாஜகதான் என பழனிசாமி பேசுகிறார். ஆனால், அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) மறைவுக்குப் பின்னர், ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவரை மாற்றிவிட்டு சின்னம்மாவை (வி.கே. சசிகலா) முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். அதன்பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவங்கி சென்றார்.

அப்போது திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இவரை (பழனிசாமி) காப்பாற்றியது திமுக இல்லை. அதிமுகவின் 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான். அவர்களில் 18 பேர் பழனிசாமியின் செயல்பாடுகள் சரியில்லை என்றுதான் ஆளுநரிடம் மனுகொடுத்து அவரை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இல்லை.

அன்றைக்கு நடந்த பிரச்சினை என்னவென்று நமக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். எனது சித்தி(வி.கே. சசிகலா), பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, கூவத்தூரில் நான் தான் முதல்வர் வேட்பாளர் என எம்எல்ஏ-க்களிடம் சொல்லாதீர்கள். அவர்கள் எனக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றது ஏன்?” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory