» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நடு ரோட்டில் நிற்பார்கள்: இபிஎஸ் ஆவேசம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:08:29 AM (IST)
அதிமுகவுக்கு எவர் துரோகம் செய்தாலும் நடுரோட்டில் நிற்பார்கள், விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள் என்று அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுகிறார். | படம்:ம. பிரபு |
சென்னை: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான். அதற்கு நன்றியுடன் இருக்கிறோம் என்று அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், வடபழனியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை நமக்கு போதித்தவர் பேரறிஞர் அண்ணா.
சிறந்த நுண்ணறிவு, எழுத்து, மொழிப் புலமை, மேடைப் பேச்சு, அரசியல் நாகரிகம், தொண்டர்களை ஈர்க்கும் அன்பு, போராட்ட குணம், பகுத்தறிவு சிந்தனை, ஆளுமைத்திறன், தலைமைப் பண்பு,எளிமையான வாழ்வு என அனைத்திலும் அன்னாந்து பார்க்க வைக்கக் கூடியவர்தான் அண்ணா. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது கனவுகளை நனவாக்க ஏராளமான திட்டங்கள் எம்ஜிஆர் கொண்டுவந்தார்.
2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சி, பொற்கால ஆட்சி. இதில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. திமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் 1 மருத்துவக் கல்லூரியைக்கூட கொண்டுவரவில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கும், காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகத்தை திருடுகின்றனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், திருமண உதவி திட்டம், அம்மா இரு சக்கர வாகன திட்டம், மடிக்கணினி திட்டம் ஆகியவை மீண்டும் செயல்படுத்தப்படும். இன்றைக்கு சிலர் அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள். அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானம்தான் முக்கியம். அதை இம்மியளவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க வாக்களித்தவர்களையும் மன்னித்து துணை முதல்வர் பதவி கொடுத்தோம். அவர்கள்தான் அதிமுகவினரின் கோயிலான எம்ஜிஆர் மாளிகையை தாக்கினர். இவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க வேண்டுமா? நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். யாரும் என்னை மிரட்டிப் பார்க்க முடியாது.
சிலர் அதிமுகவை கபளீகரம் செய்து ஆட்சியை கைப்பற்றப் பார்த்தார்கள். அப்போது ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜகதான். அவர்களுக்கு நன்றியோடு இருக்கிறோம். கூட்டணி சேருவது என்பது, கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான். அதிமுகவை காப்பாற்ற அனைவரும் துணிந்து நிற்க வேண்டும். அதிமுகவுக்கு எவர் துரோகம் செய்தாலும் நடுரோட்டில் நிற்பார்கள், விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் : வைஷாலிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:19:45 AM (IST)

கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:31:34 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)
