» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் வரிப்பணம் ரூ.1.53 கோடி வீணடிப்பு? பாரதியார் நினைவு இல்லச் சீரமைப்பில் முறைகேடு புகார்!!

சனி 4, ஜூலை 2026 4:45:48 PM (IST)

Bharathiyarillam4ii.jpg

எட்டயபுரத்தில் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியாரின் நினைவு இல்லம் சீரமைப்பு பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியாரின் நினைவு இல்லம், சிறுவர்கள் விளையாடிய கிரிக்கெட் ரப்பர் பந்து பட்டதில் சேதமடைந்துள்ளது. இச்சீரமைப்புப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, சேதமடைந்த பகுதியை உடனடியாகச் சீரமைக்கக் கோரி அதிமுக சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் புரட்சிகரப் பாடல்கள் மூலம் விடுதலை எழுச்சியை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் பிறந்த வீடு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அரசு நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தை இந்தியா முழுவதிலும் இருந்து கவிதை ரசிகர்கள், எழுத்தாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் எனப் பல்வேறு தரப்பினர் தினசரி பார்வையிட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நினைவு இல்லம் சேதமடைந்ததை அடுத்து, அதிமுக உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதனைத் தொடர்ந்து, அப்போதைய திமுக அரசு ரூ.1 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சீரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்தத் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்கள் அடித்த ரப்பர் பந்து பட்டு, புதுப்பிக்கப்பட்ட பாரதியார் நினைவு இல்ல வீட்டின் ஒரு பகுதி திடீரெனச் சேதமடைந்தது.

மக்கள் வரிப்பணத்தில் ரூ.1.53 கோடி செலவிடப்பட்டும், இல்ல முறையான தரத்துடன் சீரமைக்கப்படவில்லை என்றும், மக்கள் பணத்தைப் முந்தைய திமுக அரசு முறைகேடு செய்துவிட்டதாகவும் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் சாடியுள்ளார். மேலும், சேதமடைந்த பாரதியார் நினைவு இல்லப் பகுதியைத் தற்போதைய தமிழக அரசு உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory