» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி கடலில் அத்துமீறி மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16பேர் விசைப்படகுடன் சிறைபிடிப்பு!

செவ்வாய் 12, மே 2026 3:36:31 PM (IST)

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி கடல் எல்லைக்குள் புகுந்து சட்டவிரோதமாக மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16 பேரை விசைப்படகுடன் உள்ளூர் மீனவர்கள் சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடல் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஏப்ரல் 15 முதல் இந்த ஆண்டுக்கான தடைக்காலம் தொடங்கி அமலில் உள்ளது. இதனால் தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளைக் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் தூத்துக்குடி கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடந்த சில நாட்களாக மீன்பிடித்து வருவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், நேற்று இரவு தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் சென்று கண்காணித்தபோது, அங்கு கேரள மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

உடனடியாகச் செயல்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், அத்துமீறி நுழைந்த கேரள மீனவர்கள் 16 பேரை அவர்களது படகுடன் சிறைபிடித்துக் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த அந்த 16 கேரள மீனவர்களிடமும் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடைக்காலத்தில் அண்டை மாநில மீனவர்கள் தமிழக எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த இச்சம்பவம் தூத்துக்குடி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory