» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)



பழைய குற்றால அருவிவில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக, பழைய குற்றால அருவிப் பகுதி கடுமையான சேதத்தைச் சந்தித்தது. அங்குள்ள பாதுகாப்புத் தடுப்புகள், கழிவறைகள், தரைத்தளங்கள் மற்றும் அருவிக்குச் செல்லும் சாலைகள் முற்றிலும் சிதைந்தன. இதனைத் தொடர்ந்து, வனத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்ததாவது:    "பழைய குற்றால அருவியில் இனி வரும் காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால், பாதுகாப்புத் தடுப்புகள் அடித்துச் செல்லப்படாமல் இருக்கத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பு ஆண்களும் பெண்களும் அருகருகே நின்று குளிக்கும் நிலை இருந்தது. தற்போது அருவியின் நடுவே சுவர் போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாகக் குளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது."

மேலும், "மறுசீரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. கழிவறைக்கான செப்டிக் டேங்க் அமைக்கும் பணி மட்டுமே பாக்கியுள்ளது. தற்போது கோடை வெயில் காரணமாக நீர்வரத்து குறைவாக உள்ளது. மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும்," என்றும் அவர் கூறினார்.

வெள்ளச் சேதம் காரணமாகச் சுமார் 133 நாட்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு, பழைய குற்றால அருவி மூடப்பட்டிருந்தது. தற்போது பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory