» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

திங்கள் 12, ஜனவரி 2026 8:37:25 PM (IST)

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொளத்தூர் 6வது தெரு மகாத்மா காந்தி நகரை சேர்ந்த ரவுடி ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 9 வழக்குகள் உள்ளன. ரவுடி ஆதிக்கும் , சென்னை ஆவடி ஏரிக்கரை தாழம்பூ தெருவை சேர்ந்த நவீன்குமார் மனைவி சுசித்ரா (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த 18ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நேற்று இரவு உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்தது குறித்து ஆதியிடம் சுசித்ரா தெரிவித்துள்ளார். இதையடுத்து சுசித்ராவை பார்க்க ஆதி நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். சுசித்ராவை பார்த்துவிட்டு நேற்று இரவு மருத்துவமனை வளாகத்திலேயே ஆதிகேசவன் படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இன்று அதிகாலை ஹெல்மெட் அணிந்தபடி மர்ம நபர்கள் 3 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஆதிகேசவனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஆதிகேசவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையடுத்து, ஆதிகேசவனை வெட்டிக்கொன்ற கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ஆதிகேசவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரவுடி ஆதிகேசவனை வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். ரவுடி கொலையில் தொடர்புடையவர்கள் யார்? கள்ளக்காதல் விவகாரத்தில் கொலையா? வேறு சம்பவங்களில் பழிக்குப்பழியாக? ரவுடி ஆதிகேசவன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும், சாருமதி, சுசித்ரா உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் நோயாளிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கூடுதல் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆதி என்ற ஆதிகேசவன் உள்பட சிலர் மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு எதிரே அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கேயே தூங்கி உள்ளனர். அவர்களை போலீசார் மருத்துவமனையில் இருந்து வெளியேற அறிவுறுத்தியும் வெளியேறவில்லை. ஆதிகேசவன் சரித்திர பதிவேடு குற்றவாளி. 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு தற்போது தான் வெளியே வந்தார். 

ஆதி இருக்கும் இடத்தை அவருடன் இருந்த சிலரே கொலைகார கும்பலிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய 9 தனிப்படை அமைத்துள்ளோம். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது என முதல்கட்ட புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் மருத்துவமனையில் ரோந்து பணியில் இருந்த போலீசார் உள்பட போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். இரவு பணியில் 10 போலீசார் இருந்தனர். அவர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory