» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமாவளவன் பேச்சு

செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:53:04 PM (IST)

பாஜகவின் ஹெச்.ராஜா,குருமூர்த்தி பேசும் அரசியலை அப்படியே சீமானும் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார் என்று திருமாவளவன் கூறினார். 

கோவில்பட்டி அருகே கிழவிபட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: காங்கிரஸை எதிர்த்து தேர்தலில் போட்டியிடத்தான் பாஜக இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை செயல்படவிடாமல் தடுத்து, அதை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய நோக்கம்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அரசாங்க மதம் இருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு இல்லை. இங்கு மக்களுக்கு மதம் இருக்கிறது. அரசாங்கத்துக்கு மதம் இருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்தியவர் அம்பேத்கர். அந்த நேரத்தில் அவருக்கு துணையாக நின்றவர்கள் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு. காங்கிரஸுடன் திருமாவளவன் நிற்பதற்கு முக்கியமான காரணம் இதுதான்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோருடன் என்னால் கைகோத்து நிற்க முடிந்தது. இன்று அந்த நிலை இல்லை. இனி ஒன்று சேர முடியுமா? என்ற கேள்வி உள்ளது. இது சனாதன சக்திகளின் சூழ்ச்சி. இதையெல்லாம் கடந்து ஒன்று சேர வேண்டும் என்றார்.

முன்னதாக, மதுரை பெருங்குடியில் விசிக சார்பில் தூய்மை பணியாளர்களின் புத்தாண்டு கொண்டாட்ட விழா நடைபெற்றது. இவ்விழாவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சீமான் தமிழ் தேசிய அரசியல் பேசுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், அவர் பேசும் அரசியலில் பெரியார் வெறுப்பு ஆழமாக உள்ளது. 

திமுக என்னும் தேர்தல் கட்சியை மட்டுமே அவர் எதிர்க்கவில்லை, அடிப்படை தத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். பாஜகவின் ஹெச்.ராஜா,குருமூர்த்தி பேசும் அரசியலை அப்படியேசீமானும் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார். அதனடிப்படையில் தான் சீமான் கருத்தை விமர்சித்தோமே தவிர,மற்றபடி அவர் மீது எங்களுக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும், உள்நோக்கமும் இல்லை. 

நான் மங்களூர் தொகுதியில் தேர்தலில் திமுக கூட்டணியோடுதான் போட்டியிட்டேன். பாஜக இருக்கும் அணியில் சேரமுடியாது என்று சொன்னபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்களோடுதான் கூட்டணி வைக்கிறீர்கள், பாஜகவோடு அல்ல என்று சொன்னதன் பேரில் அந்த அணியில் இணைந்தோம்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory