» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!

செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக நகர்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளுக்கு விளையாட்டு தொகுப்புகள் வழங்குவதை துவக்கி வைத்ததார்கள்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் முன்னிலையில் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி பேசுகையில்-

தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்ஒருபகுதியாக 2023-24ம் நிதி ஆண்டில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர்.கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 95 ஊராட்சிகளுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் மற்றும் வயதனோர் பயன்பெறும் வகையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து நகர்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கும் கிரிக்கெட், கையுந்துப் பந்து, எறிபந்து, கால்பந்து, பூபந்து, ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபடி, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் டி ஷர்ட், விசில், கோன்ஸ், தொப்பி உள்ளிட்ட 30 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிரிக்கெட் மட்டைகள் 4, கிரிக்கெட் ஸ்டெம்புகள் 4, கிரிக்கெட் பந்துக்கள் 6, கிரிக்கெட் தொகுப்பு பை-1, வாலிபால்-6, வாலிபால் வலை-2, கால்பந்துகள், கேரம் பவுடர், கேரம் காயின் 2 செட், 5 சிலம்பம் குச்சிகள், செஸ் போர்டு, தொப்பி-100, டி சார்டு 100 உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் 1 வார்டிற்கு 3 தொகுப்புகள் வீதம் 52 வார்டுகளுக்கு 156 விளையாட்டு தொகுப்பும், நகராட்சியில் 1 வார்டிற்கு 2 தொகுப்புகள் வீதம் 117 வார்டுகளுக்கு 234 விளையாட்டு தொகுப்பும், பேரூராட்சியில் 1 வார்டிற்கு 1 தொகுப்பு வீதம் 800 வார்டுகளுக்கு 800 விளையாட்டு தொகுப்புகளும் என மொத்தமாக 1190 விளையாட்டு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு உபகரணங்களின் பாதுகாவலர்கள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தன்னார்வ குழுக்கள், வார்டு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைத்தலைவர், குழுமத்தலைவர் ஆகியோர் விளையாட்டு உபகரணங்களின் பாதுகாவலர்கள் ஆவார்கள்.

அனைத்து தரப்பினரும் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் எடுத்து விளையாடலாம். விளையாடி முடித்தவுடன் பத்திரமாக விளையாட்டு வீரர், வீராங்களை வைக்க வேண்டும். 

விளையாட்டு உபகரணங்களை நூலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கல்லூரிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயிற்சி மேற்கொண்ட பின் உபகரணங்களை மீண்டும் முறையாக ஒப்படைத்தல் வேண்டும். விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்ட வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் சேர்ந்து பயனடைய வழிவகை செய்யப்படும். 

2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 5 பிரிவுகளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வைத்து நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 35,000 க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மேலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் ஒவ்வொருவருக்கும் அரசுப்பணி, அரசுக்கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தேசிய, மாநில உலகளவில் சிறந்து விளங்க வேண்டும். எனவே நாம் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் சிறந்து விளக்க வேண்டுமென தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வழங்கியதோடு, மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இவ்விழாவில் மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் வினு, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, பூதலிங்கம், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory