» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி கனமழை நிவாரண பணிகளுக்கு ரூ.212 கோடி மதிப்பீடு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்

செவ்வாய் 19, அக்டோபர் 2021 3:42:23 PM (IST)வரும் காலங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளபாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் கூட்டரங்கில், வருவாய்த்துறையின் சார்பில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா சாமி, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (19.10.2021) நடைபெற்றது. 

ஆய்வுக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு, துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென என்னையும், அமைச்சர்செந்தில்பாலாஜி, அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா சாமி, ஆகியோருக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று (19.10.2021) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில், மழையளவு வெகுவாக குறைந்துள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரும் வடிய தொடங்கியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மழைவரும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, தமிழக முதலமைச்சர் குமரி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் அதிக மழை பொழியும்போது குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வராமல் தடுப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, சென்ற முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் ஏற்பட்ட பகுதியினை ஆய்வு செய்வதற்காக நான் இரண்டு தினங்கள் மாவட்டத்திற்கு வருகை தந்து, கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, பொதுப்பணித் துறைக்கு ரூ.33 கோடியும், நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.27 கோடியும், மின்சாரத் துறைக்கு ரூ.152 கோடி என ஆக மொத்தம் ரூ.212 கோடி திட்ட மதிப்பீடு மாவட்ட ஆட்சியர் வாயிலாக தயார் செய்யப்பட்டு, தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அந்தந்த துறை பட்ஜெட்களில் ஒதுக்கீடு செய்தவதற்கான ஒப்புதல் வழங்குவதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. 

மேலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.99 கோடி நிதிஒதுக்கீடு செய்ய தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிகளுக்கும் அதேபோல் ஒப்புதல் செய்து வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோன்று மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் உடனடியாக அதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். தற்போது பெய்த கனமழையினால் 101 மின்மாற்றிகள் தண்ணீரில் மூழ்கி மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி வருகை தந்து, 206 மின்மாற்றிகளுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து மின் தளவாட பொருட்களும் உடனடியாக மதுரை மற்றும் திருநெல்வேலியிருந்து வரவழைக்கப்பட்டு, துரித கதியில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 45 மின்மாற்றிகள் வெள்ளநீர் இன்னும் வடியாமல் இருப்பதால் சரிசெய்யும் பணி தாமதப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 3661 வீட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 2922 வீட்டு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் கொடுக்க வேண்டிய 739 வீட்டு மின் இணைப்புகள் தண்ணீர் வடிந்தவுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பயிரிட்டுள்ள 35 ஏக்கர் நெல் சாகுபடி சேதமடைந்துள்ளது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 ஏக்கர் வாழை மரம் மற்றும் 4½ ஏக்கர் மரவள்ளிக்கிழங்கு நீரில் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது. 2½ ஏக்கர் காய்கறி முழுவதும் சேதமடைந்துள்ளது. அதற்கான நிவாரணம் உடனடியாக வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். 

தாழ்வான பகுதிகளிலுள்ள சுமார் 337 பொதுமக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மாதங்கள் கழித்து நிவாரணம் வழங்குவதில் எந்தவொரு பலனும் இல்லை. எனவே, தற்போது பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தோவாளை வட்டம், செண்பகராமன்புதூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த நெற்பயிர்களை இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். 

நிகழ்வுகளின்போது, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், திட்ட இயக்குனர்கள் ச.சா.தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ (மகளிர் திட்டம்), இணை இயக்குனர் (வேளாண்மை) சத்தியஜோஸ், துணை இயக்குனர் (தோட்டக்கலை) ஷீலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மா.வீராசாமி (பொத), எம்.ஆர்.வாணி (வேளாண்மை), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.ராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார்,  உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory