» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க் கட்சியினர் கவலை அடைந்தனர் : அமித்ஷா

செவ்வாய் 29, ஜூலை 2025 4:50:08 PM (IST)

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கவலையடைந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதேவேளை, ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று உரையாற்றினார். அதேவேளை, நேற்று மதியம் காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகள்தான் பஹல்காம் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புப்படையினர் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, காஷ்மீரில் நேற்று பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ஆபரேஷன் மகாதேவ் தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட இந்த 3 பயங்கரவாதிகளும் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள் ஆவர். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிடக்கூடாது என்று பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அடையாளம் கண்ட பாதுகாப்புப்படையினர் அவர்களை சுட்டுக்கொன்றனர். நேற்று நடந்த ஆபரேஷன் மகாதேவின்போது சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகள் சுலைமான், ஆப்கன், ஜிப்ரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பயங்கரவாதி சுலைமான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டுள்ளான். சுலைமான் பஹல்காம் தாக்குதல், காஷ்மீரின் ஜகாங்கிர் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவன் ஆவார்.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் முயற்சிக்கிறார். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? என்பதற்கு ஆதாரத்தை ப.சிதம்பரத்தை கேட்கிறார். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சியடைவார்கள் என நினைத்தேன். ஆனால், எதிர்க்கட்சியினர் கவலையடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory