» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிசார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!

புதன் 30, ஜூலை 2025 8:32:25 PM (IST)

ஸ்ரீஹரிகோட்டாவில் நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்) என்ற அதிநவீன செயற்கைக்கோளை ரூ.11,284 கோடி செலவில் உருவாக்கியுள்ளது.

2,392 கிலோ எடை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சரியான பாதையில் ராக்கெட் பயணிப்பதை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளும், நாசா விஞ்ஞானிகளும் கண்காணித்தனர். சரியாக 157-வது நொடியில் எரிபொருள் தீர்ந்துபோன அடிப்பகுதி தனியாக கழன்று கடலுக்குள் விழுந்தது.

171-வது நொடியில் புவி ஈர்ப்பு பகுதியில் இருந்து ராக்கெட் வெளியே சென்ற நிலையில், அதன் தலைப்பகுதியில் இருந்து நிசார் செயற்கைக்கோள் வெளியேறி சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் பயணம் மேற்கொண்டது. சரியாக 1115-வது நொடியில், அதாவது 19-வது நிமிடத்தில் பூமிக்கு மேலே 747 கி.மீ. உயரத்தில் நிசார் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

ராக்கெட்டை தொடர்ந்து செயற்கைக்கோளின் பயணத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் பயணத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அதன் திட்ட இயக்குனர் மற்றும் அவரது குழு விஞ்ஞானிகளை அழைத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டினார். அங்குள்ள மீடியா சென்டரில் இருந்து 4 ஆயிரம் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ராக்கெட் விண்ணில் பாய்ந்ததை நேரடியாக கண்டு ரசித்தனர்.

இந்த நிசார் செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன கேமரா பூமியின் மேலடுக்கில் நிகழும் நிகழ்வுகளை துல்லியமாக படமெடுத்து, 12 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கு அனுப்பிவைக்கும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இதுவரை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 101 ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 518 செயற்கைக்கோள்களையும் விட, இந்த நிசார் செயற்கைக்கோள் சிறப்பு வாய்ந்தது ஆகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையை சேர்ந்த முதல் செயற்கைக்கோள் ஆகும்.

இந்த அதிநவீன செயற்கைக்கோள் வானிலை மாற்றம், பகல் மற்றும் இரவு தரவுகளையும் துல்லியமாக படம் எடுப்பதுடன் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிந்து தகவல் அனுப்பும்.

மேலும், பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.

அடுத்த 12 நாட்களில் முதல் புகைப்படத் தொகுப்பை நிசார் செயற்கைக்கோள் பூமிக்கு அனுப்பும். அதைக்காண விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். நாட்டு மக்களுக்கும் அதை வெளியிடுவார்கள்.

பொதுவாக, செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. என்ற 2 வகையான ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவப்படும். அதாவது, 1800 கிலோ எடை வரையுள்ள செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும், அதற்கு அதிகமான எடை கொண்ட செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் ஏவப்படும்.

தற்போது, விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்டது என்பதால், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அந்த வகையில் தற்போது ஏவப்பட்டது 18-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

இந்த வகை ராக்கெட்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த என்ஜினை ரஷியாவிடம் இருந்து நாம் அதிக விலைக்கு வாங்கினோம். தற்போது, நாமே கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கிறோம். அந்த வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12-வது கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் விண்ணில் பயணம் மேற்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory