» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
விராட் கோலி புதிய சாதனை: முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி
திங்கள் 12, ஜனவரி 2026 8:25:58 AM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய ஆடும் லெவனில் மொத்தம் 6 பவுலர்கள் இடம் பெற்றனர்.
அணி கலவையில் சில வித்தியாசமான முயற்சிகளை பார்ப்பதாக இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறினார். காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் அய்யரும் அணிக்கு திரும்பினார். நியூசிலாந்து அணியில் அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ்டியன் கிளார்க் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து ஹென்றி நிகோல்சும், டிவான் கான்வேவும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். நிகோல்ஸ் 4 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ‘டீப் தேர்டு’ திசையில் நின்ற குல்தீப் யாதவ் தவற விட்டார். கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி ரன் சேகரித்தார். அதன் பிறகு இந்த கூட்டணியை செஞ்சுரி பார்ட்னர்ஷிப்புக்கு பிறகே உடைக்க முடிந்தது. இருவரும் ஒரே ஓவரில் அரைசதங்களை கடந்தனர்.
அணியின் ஸ்கோர் 117 ஆக (21.4 ஓவர்) உயர்ந்த போது நிகோல்ஸ் (62 ரன், 69 பந்து, 8 பவுண்டரி) ஹர்ஷித் ராணாவின் பந்தில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலிடம் பிடிபட்டார். அவரது இன்னொரு ஓவரில் கான்வேவும் (56 ரன், 67 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். இந்திய மண்ணில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நியூசிலாந்து தொடக்க ஜோடி என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர்.
இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு நுழைந்த டேரில் மிட்செல் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் மிடில் வரிசையில் சற்று சறுக்கியது. அதிரடி சூரர்கள் வில் யங், கிளென் பிலிப்ஸ் தலா 12 ரன்னில் நடையை கட்டினர். இதற்கு மத்தியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஓவர்களில் சிக்சர்களை விரட்டியடித்து அணியை சவாலான நிலைக்கு நகர்த்திய டேரில் மிட்செல் 84 ரன்களில் (71 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எல்.பி.டபிள்யூ, ஆனார்.
கடைசி கட்டத்தில் புதுமுக வீரர் கிறிஸ்டியன் கிளார்க்கின் (3 பவுண்டரியுடன் 24 ரன்) பங்களிப்பால் அந்த அணி 300 ரன்களை தொட்டது. 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 300 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 301 ரன் இலக்கை நோக்கி இந்தியாவின் இன்னிங்சை ரோகித் சர்மாவும், கேப்டன் சுப்மன் கில்லும் நிதானமாக தொடங்கினர். ரோகித்சர்மா 26 ரன்னில் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் சுப்மன் கில்லுடன், விராட் கோலி கைகோர்த்தார். 2 பவுண்டரியுடன் அமர்க்களமாக ரன் கணக்கை ஆரம்பித்த கோலி அவ்வப்போது பந்துகளை விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். சுப்மன் கில்லும் நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 16.1 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 100-ஐ தொட்டது.
பவர்-பிளே முடிந்ததும் ஒன்று, இரண்டு வீதம் ரன் எடுப்பதில் கவனம் செலுத்தியதால் 18 முதல் 25 ஓவர்கள் வரை பந்து எல்லைக்கோடு பக்கம் செல்லவில்லை. ஆனாலும் ரன்ரேட் 5.50-க்கு குறையாமல் சென்றது. அணியின் ஸ்கோர் 157-ஐ எட்டிய போது சுப்மன் கில் 56 ரன்களில் (71 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக்கின் பந்தில் கேட்ச் ஆனார். ஆதித்யா அசோக், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது கவனிக்கத்தக்கது. அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், ஆதித்யா அசோக்கின் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசி அவரை மிரள வைத்தார்.
மறுமுனையில் அபாரமாக ஆடிய விராட் கோலி 7 ரன்னில் தனது 54-வது சதத்தை கோட்டை விட்டார். 93 ரன்களில் (91 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜாமிசன் பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் (49 ரன், 47 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற சிக்கல் உருவானது. இந்த சூழலில் ஹர்ஷித் ராணா அதிரடியாக 29 ரன்கள் (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) திரட்டி நெருக்கடியை கொஞ்சம் குறைத்தார்.
கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான 49-வதுஓவரை கிறிஸ்டியன் கிளார்க் வீசினார். அந்த ஓவரில் முதல் 3 பந்தில் 3 ரன் எடுத்தனர். கடைசி 3 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் லோகேஷ் ராகுல் ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.
இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 29 ரன்னுடனும் (21 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வருகிற 14-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.
விராட் கோலி புதிய சாதனை
இந்த போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவர் 25 ரன்களை பூர்த்தி செய்த போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 28,000 ரன்களை அதிவேகமாக பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ஸ்களில் 28,000 ரன்களை பூர்த்தி செய்திருந்தார்.
ஆனால் தற்போது தனது 624-வது இன்னிங்ஸ்சிலேயே விராட் கோலி 28,000 ரன்களை பூர்த்தி செய்து சச்சினின் சாதனையை தகர்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். விராட் மற்றும் சச்சினைத் தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது பேட்ஸ்மேன் இலங்கையின் குமார் சங்கக்காரா ஆவார்.
வேகமாக 28,000 ரன்கள்:
விராட் கோலி - 624 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 644 இன்னிங்ஸ்
குமார் சங்கக்காரா - 666 இன்னிங்ஸ்கள்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்காளதேசம் முடிவெடுக்க வேண்டும்: தமிம் இக்பால்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 12:03:19 PM (IST)

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
சனி 3, ஜனவரி 2026 5:42:48 PM (IST)

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

