» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்: இந்திய அணி அறிவிப்பு

ஞாயிறு 4, ஜனவரி 2026 12:03:19 PM (IST)



நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வதோதராவில் வருகிற 11-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் 14-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் 18-ந் தேதியும் நடக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் நேற்று தேர்வு செய்து அறிவித்தனர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரின் போது கழுத்து வலியால் பாதிக்கப்பட்டு விலகிய கேப்டன் சுப்மன் கில் முழு உடல் தகுதியை எட்டி இருப்பதை தொடர்ந்து அணிக்கு திரும்பி இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது பந்தை பிடிக்கும் போது தரையில் விழுந்து காயம் அடைந்த ஸ்ரேயாஸ் அய்யர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் அவர் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்தே அணியில் இடத்தை உறுதி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ், விஜய் ஹசாரே கோப்பை போட்டி தொடரில் வருகிற 6-ந் தேதி நடைபெறும் இமாசலபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் காணுகிறார். அதில் அவர் போட்டிக்குரிய உடல் தகுதியை நிரூபிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். இதேபோல் காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் சுப்மன் கில், கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக ஆடுகிறார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். அந்த தொடரில் அங்கம் வகித்த திலக் வர்மா, துருவ் ஜூரெல் மற்றும் சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. காயம் அடைந்த வீரர்கள் திரும்பியதால் அவர்களுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெயர் மறுபடியும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா ஒரு ஆட்டத்தில் 10 ஓவர்கள் பந்து வீச இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டி முடிந்ததும் 20 ஓவர் போட்டி வருகிற 21-ந் தேதி ஆரம்பமாகிறது. இதில் கலந்து கொள்ளும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது நினைவுகூரத்தக்கது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி வருமாறு: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory