» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
செவ்வாய் 12, செப்டம்பர் 2023 11:45:52 AM (IST)

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்திய அணி.
கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.
தொடக்கம் முதலே ராகுல் - கோலி இணையை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் முயற்சித்தாலும், பேட்ஸ்மேன்கள் இருவரும் வலுவான கூட்டணி அமைத்து பந்துகளை நாலாபுறமும் வீசியடித்தனர். அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 60 பந்துகளில் அரை சதத்தை கடந்து நம்பிக்கையூட்டினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 55 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 66-வது அரை சதத்தை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் பவுலர்களை ஆட்டம் காணச் செய்த இந்த இணையில் 2 சிக்ஸர்ஸ், 10 ஃபோர் அடித்து 100 பந்துகளில் சதத்தை பதிவு செய்து ‘மாஸ்’ காட்டினார் கே.எல்.ராகுல். காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் சதமடித்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவரைத் தொடர்ந்து விராட் கோலி 83 பந்துகளில் சதம் விளாசினார். 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார்.
இதன் மூலம் அதிவேகமாக 13,000 (267 இன்னிங்ஸ்) ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 47வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கொழும்பு பிரமேதசா மைதானத்தில் (2012, 2017, 2017 மற்றும் 2023) தொடர்ச்சியாக 4 ஒருநாள் போட்டிகளில் சதத்தை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.
இருவரும் இணைந்து காட்டிய அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. இதில் 94 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலியும், 106 பந்துகளில் 111 ரன்களுடன் கே.எல்.ராகுலும் களத்தில் இருந்தனர். கோலி ராகுல் இணைந்து 253 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி தரப்பில் அஃப்ரீடி, ஷதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்களை இழந்து வந்தது. அந்த அணி 50 ரன்களை எட்டுவதற்குள் இமாம்-உல்-ஹக், பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வானை போன்ற பிரதான வீரர்களை இழந்தது. அதற்கடுத்து அந்த அணியின் 5 விக்கெட்களை தொடர்ச்சியாக கைப்பற்றினார் குல்தீப். அவரது சுழலில் சிக்கி பாகிஸ்தான் அணி வீழ்ந்தது. நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரஃவுப், பேட் செய்ய வரவில்லை.
32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. பும்ரா, பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் விராட் கோலி. இன்று (செப்.12) இலங்கைக்கு எதிராக சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல்!
செவ்வாய் 6, மே 2025 11:07:39 AM (IST)
