» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் 2021: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா!

வியாழன் 14, அக்டோபர் 2021 11:03:23 AM (IST)டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா (18), தவான் (36) ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் அடித்தனர். ஆனால் தவான் 39 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 23 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷாப் பண்ட் 6 ரன்னிலும், ஹெட்மையர் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 30 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.  பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 96 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர் 41 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களால் இவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை.

அடுத்து ஷுப்மான் கில் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 123 ரன்னாக இருக்கும்போது நிதிஷ் ராணா 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணிக்கு 4 ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது. ஷுப்மான் கில் 46 பந்தில 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை அன்ரிச் நோர்ஜோ வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் நோர்ஜே. இதனால் கடைசில் ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

அஷ்வின் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபாதி ஒரு ரன் அடித்தார. 2-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை திரிபாதி சிக்சருக்கு தூக்கினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடைசி 4 ஓவர்களையும் டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக வீசி ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு சென்றனர்.123 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 7 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது. ஆனால், கடைசி இரு பந்துகளில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் அஸ்வின் பந்தில் திரிபாதி அடித்த சிக்ஸர் வெற்றிக்கு கொண்டு சென்றது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. துபாயில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி மோதுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory