» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆண்டர்சன் அன்கோ அசத்தல் : 78 ரன்களில் சுருண்டது இந்திய அணி

வியாழன் 26, ஆகஸ்ட் 2021 10:38:01 AM (IST)இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

முதல் ஓவரின் ஐந்தாவது பந்தைச் சந்தித்த கே.எல்.ராகுல் அதை டிரைவ் செய்ய முற்பட்டு அது சரியாகப் படாமல் பேட்டை உரசிவிட்டு விக்கெட் கீப்பர் பட்லரிடம் தஞ்சம் புகுந்தது. கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல் இம்முறை டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது. தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் ஐந்தாவது ஓவரில் ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்ததாக கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவரையும் 7 ரன்களில் வீழ்த்தினார் ஆண்டர்சன். 21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்னர்  ரோகித் சர்மாவும் ரஹானேவும் சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தியநிலையில்,  54 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்த ரஹானே முதல் பகுதியின் கடைசி ஓவரில் ஆலி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 40.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன் மற்றும் ஆலி ராபின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி  42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஹசீப் ஹமீத் 130 பந்துகளில் 60 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 125 பந்துகளில் (52 ரன்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory