» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை டெஸ்டில் அஸ்வின் சதம்: வலுவான நிலையில் இந்தியா!!

திங்கள் 15, பிப்ரவரி 2021 8:43:08 PM (IST)இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3-ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் சதத்துடன் 286 ரன்கள் எடுத்தது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்‌ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது. 2-ம் நாள் முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 25, புஜாரா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய அணியின் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. விராட் கோலியைத் தவிர இதர வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினார்கள். முதல் ஓவரிலேயே புஜாரா 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரோஹித் சர்மாவை 26 ரன்களில் ஃபோக்ஸின் அபாரமான ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தினார் லீச். 

5-ம் நிலை வீரராக ரஹானேவுக்குப் பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கினார். ஆனால் அவரால் இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 8 ரன்களில் லீச் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். 2 பவுண்டரிகளில் அடித்து 10 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரஹானே. 18 பந்துகளுக்குத் தாக்குப்பிடித்த அக்‌ஷர் படேல், 7 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய அஸ்வின், நன்கு விளையாடி, விரைவாக ரன்கள் எடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 

உணவு இடைவேளையில் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கோலி 38, அஸ்வின் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 4 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 351 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து கவனமுடன் விளையாடிய கோலி, 107 பந்துகளில் அரை சதம் எட்டினார். சொந்த மண்ணில் சிறப்பாகப் பந்து வீசி வரும் அஸ்வின், இந்த இன்னிங்ஸில் பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணியின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு 64 பந்துகளில் அரை சதமெடுத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

149 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த கோலி, மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 3 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, தேநீர் இடைவேளையின்போது 416 ரன்கள் முன்னிலையுடன் 73 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 68 ரன்கள் மற்றும் இஷாந்த் சர்மா ரன் எதுவுமின்றி களத்தில் இருந்தார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, இஷாந்த் சர்மா 7 ரன்களில் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடினமான ஆடுகளத்தில் பல முக்கியமான பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நிலையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 134 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 5-வது டெஸ்ட் சதமாகும். அஸ்வின் சதமடித்தபோது மறுமுனையில் சிராஜும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

கடைசி விக்கெட்டுக்கு அஸ்வினுக்கு நல்ல இணையாக விளங்கிய சிராஜ், 2 சிக்ஸர்களை அடித்து ஆச்சர்யப்படுத்தினார். அஸ்வின் - சிராஜ் கூட்டணி 49 ரன்கள் எடுத்தது. கடைசியில் 106 ரன்களில் ஸ்டோன் பந்துவீச்சில் போல்ட் ஆனார் அஸ்வின். சிராஜ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி,  2-வது இன்னிங்ஸில் 85.5 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, வழக்கம்போல இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. டாம் சிப்லி, அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 4 பவுண்டரிகள் அடித்த ரோரி பர்ன்ஸ், 25 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நைட் வாட்ச்மேனாகக் களமிறங்கிய லீச், ரன் எதுவும் எடுக்காமல் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் வீழ்ந்தார்.  3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 19, ரூட் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 429 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் நாளைய தினம் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory