» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!

வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)



திருநெல்வேலி டவுண் நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

திருநெல்வேலி டவுண் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா முன்னிலை வகித்தார். இத்திருவிழா வரும் 20.06.2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 28.06.2026 அன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறவுள்ளது. 

விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்: நான்கு ரதவீதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தேரோட்டம் மற்றும் சுவாமி, அம்பாள் வீதியுலாவிற்கு இடையூறு இல்லாத வகையில், திருநெல்வேலி சந்திப்பிலிருந்து வரும் வாகனங்களை பாரதியார் தெரு, தெற்கு மவுண்ட் ரோடு, மேல மவுண்ட் ரோடு, குற்றாலம் ரோடு மற்றும் தொண்டர் நயினார் சன்னதி வழியாகத் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழா நாட்களில் மின்தடை ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். தேரோட்டத்திற்குப் பாதிப்பு இல்லாத வகையில் மின் இணைப்பு கம்பிகள் மற்றும் மின்சாரப் பெட்டிகளைப் பாதுகாப்புடன் சீரமைக்க வேண்டும்.

நான்கு ரதவீதிகளிலும் தேர்கள் தடையின்றி ஓடும் வகையில் தரமான சாலைகளை உறுதி செய்ய வேண்டும். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளைச் செய்து தருவதோடு, கிருமிநாசினிகள் தெளிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு குப்பைகள் மற்றும் பூக்களை உடனுக்குடன் அகற்றி தூய்மையைப் பராமரிக்க வேண்டும்.

நெல்லை டவுண் நெல்லையப்பர் திருக்கோயிலை இணைக்கும் அனைத்துச் சாலைகளும் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகப் போதுமான எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும்.

தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் தங்களுக்குள் ஒருங்கிணைத்து, எவ்விதக் குறைபாடும் இன்றிச் சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory