» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலுக்கு மீண்டும் சுற்றுப்பேருந்து இயக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி!

வெள்ளி 13, மார்ச் 2026 8:08:09 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாழிக்கிணறு வரையிலான சுற்றுப்பேருந்து சேவை, சுமார் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக, நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரை பேருந்துகள் செல்வதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. விடுதிகளில் முன்பதிவு செய்த பக்தர்களின் வாகனங்கள் மட்டுமே குறிப்பிட்ட எல்லை வரை அனுமதிக்கப்பட்டு வந்தன.

கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் குடமுழுக்கு மற்றும் கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்ததால், சுற்றுப்பேருந்துகள் தேரடி வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இது வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது.

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா 2025-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி இனிதே நிறைவுற்றது. அதைத்தொடர்ந்து, பெருந்திட்ட வளாகப் பணிகளான தங்கும் விடுதிகள், சஷ்டி மண்டபங்கள் மற்றும் பிரம்மாண்ட நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டன. இந்தப் புதிய கட்டிடங்களை கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் நாழிக்கிணறு பேருந்து நிலைய நுழைவாயில் வரை சுற்றுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது 3 சுற்றுப்பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படுகிறது. சுமார் ஓராண்டுக்குப் பிறகு பழையபடி நாழிக்கிணறு வரை பேருந்துகள் இயக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory