» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியம்: பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:25:13 PM (IST)

தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓ. பன்னீர்செல்வத்தை பூங்கொத்து கொடுத்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வரவேற்றார். ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் இருந்தனர்.
திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், "அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.
அரசியலில் சர்வாதிகாரமாக ஆணவப் போக்கோடு நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது எனும் சூழலை அதிமுகவுக்கு உருவாக்கியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.
ஓர் அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு ஸ்டாலின் கட்சியை வழிநடத்துகிறார். முதல்வர் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது. அடித்தட்டு, ஏழை எளியவர்கள், பெண்கள் மன மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியில் உள்ளனர். அண்ணா, கருணாநிதி எப்படி அனைத்து கட்சிகளையும் தாயுள்ளத்தோடு சட்டப்பேரவையில் அணுகினாரோ, அதே பாணியில் முதல்வர் ஸ்டாலினும் செயல்படுகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை. தென்மாவட்டங்களின் எந்தவொரு தலைவரும் வளர்ந்துவிடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அவ்வாறு அதிமுகவில் தென் மாவட்டங்களில் வளரும் தலைவர்களை பழனிசாமி அழித்து வருகிறார். பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது.
கடந்த காலங்களில் அதிமுகவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டேன். அனைவரையும் அரவணைக்கும் போக்கு இப்போது அதிமுகவில் இல்லை. அதனால் எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் வாய்ப்புக் கொடுத்தால் போட்டியிடுவேன்.
எனவே, வரும் தேர்தலில் திமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும்.
நான் சரியான முடிவை எடுத்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். திமுக ‘தீய சக்தி’ என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை.” எனத் தெரிவித்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பதவி வரை ஓபிஎஸ் வகித்துள்ளார். மூன்று முறை முதலமைச்சர், நிதியமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் சட்ட ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (அதிமுக இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி) இணைந்து ஓபிஎஸ் போட்டியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவைத் தொடங்கினாலும், அதிமுகவில் மீண்டும் இணைய தயார் என்று வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். ஆனால் ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் தெரிவித்துவிட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு தலைவர் டிடிவி தினகரனின் அமமுகவை தே. ஜ. கூட்டணியில் இணைக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டாலும், ஓபிஎஸ்ஸை சேர்க்க இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், கடந்த வாரமே சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓபிஎஸ், திமுக உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வருகின்ற சட்டப்பேரவைத் தொகுதியில் ஓபிஎஸ்ஸுக்கு போடி தொகுதியும், அவருடன் இணைந்த அவரது ஆதரவாளர்கள் இருவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மற்றும் கடனுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:38:53 PM (IST)

பேருந்து நிலையத்துக்கு மபொசி பெயரை மாற்றி கருணாநிதி பெயரா? - சீமான் கண்டனம்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:08:54 PM (IST)

நடிகையுடன் தொடர்பு: விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:57:45 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் கீதா ஜீவன் விருப்ப மனு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:34:40 PM (IST)

உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா: முதல்வர் உருக்கம்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:18:33 PM (IST)

ஓபிஎஸ் சேர்க்கை திமுகவுக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்: தமிழிசை கருத்து!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:32:51 PM (IST)

