» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்தை தவிர்த்திடுவீர் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 10:31:31 AM (IST)

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 1-ந்தேதி தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்தை தவிர்த்திடுவீர் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: கலைஞர் - தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்து; பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின் சுடரொளி ஸ்டாலின் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு, கொள்கைக் கோட்டமாம் கோபாலபுரத்தில் வளர்ந்து, இளமையிலேயே இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தை நோக்கி இளைஞர்களைத் திரட்டிடும் இனிய பணியைச் சுமந்து, கடந்து வந்த மேடு - பள்ளங்களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு; கலைஞரிடம் பயின்ற பண்புகளோடும், கடமை உணர்வோடும் கழகத்தைக் கண்களாகவும் கலைஞரை கதிரொளியாகவும் கொண்டு, என்னால் இயன்றவரை எல்லோருக்கும் பயனுள்ள வகையில், கனிவு - துணிவு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, தொண்டூழியம் ஆற்றி வரும் எனக்கு மார்ச் 1 அன்று 73-வது பிறந்தநாள்!

1-3-2026 அன்று எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களைக் கட்டாயம் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். உற்சாகமும், உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.

பிறந்தநாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை, எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளைச் செய்வது; கழகக் கொடிகளைப் புதுப்பிப்பது - புதிய கொடிகளை ஏற்றி வைப்பது - கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது - பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது - கழகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக இரத்தத் தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை. இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே என்னரும் தோழர்களின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன்!

இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும். நாட்கள் இருக்கிறதே - என்ன அவசரம் என்று எண்ணிடாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுத் தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால் "ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. 

எனவே, ஏழாவது முறையும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும்! அதுவே எனக்கு நீங்கள் வழங்கிடும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து! ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory