» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி : முதல்வர் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 10:34:48 AM (IST)

தமிழகத்தில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் ‘உலகம் உங்கள் கையில்’ எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது.
திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்களை வளர்த்தெடுத் தால்தான் மாநிலம் வளரும், நாடு வளரும். அதனால்தான் நமது ஆட்சியில் ‘நான் முதல்வன்’ தொடங்கி தற்போது இந்த மடிக்கணினி திட்டம் வரை செயல்படுத்தி வருகிறோம். இன்று அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து ஒட்டுமொத்த உலகத்தையும் நம் கைக்குள் கொண்டுவந்துவிட்டது. அதை உங்களிடம் சேர்ப்பதுதான் எங்கள் நோக்கம். மாணவர்களின் திறனும், பகுத்தறிவும், அறிவியல் பார்வையும் ஊக்குவிக்கப்பட்டால் தான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்.
இன்று உங்கள் கையில் வந்திருக்கும் மடிக்கணினி பரிசுப்பொருள் கிடையாது. உலகத்தை நீங்கள் ஆள்வதற்காக உங்கள் கையில் வந்திருக்கும் வாய்ப்பு. இதை படம் பார்க்க, கேம் விளையாட பயன்படுத்தப் போகிறீர்களா? இல்லை உங்கள் வாழ்க்கைக்கான ‘லாஞ்ச்பேர்டா' பயன்படுத்தப் போகிறீர்களா? எல்லாவற்றுக்குமே நல்லது, கெட்டது என்ற இருபக்கங்கள் உண்டு. அதில் நீங்கள் எந்த பக்கத்தை தேர்வு செய்கிறீர்களோ அதை வைத்துதான் வெற்றி உங்கள் பக்கம் வந்துசேரும்.
தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் நுழைந்துவிட்டது. அதனால் மாணவர்கள் இளநிலை படிப்புடன் நிற்காமல், மேம்பட்ட தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உங்கள் அம்மாவுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குகிறோம். மாணவர்கள் படிக்க மாதம் ரூ.1,000 உதவித்தொகை தருகிறோம். பொங்கல் கொண்டாட ரூ.3,000 கொடுக்கிறோம்.
பசியுடன் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவு தருகிறோம். ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளோம். இதெல்லாம் போதாது, இன்னும் வளர்ச்சி வேண்டும். தமிழகம் உங்களை நம்பிதான் இருக்கிறது. உலகம் உங்கள் கையில் இருக்கிறது. நீங்களும் வெற்றி பெற்று வாருங்கள். நாங்களும் வெற்றி பெற்று வருகிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்ரமணியன், அன்பில் மகேஸ், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தலைமைச் செயலர் முருகானந்தம், நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், தமிழக அரசின் நலத்திட்டங்களால் பலன்பெற்று தற்போது உயர்ந்த நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் ஒருபகுதியாக சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கண்காட்சியை அமைச்சர்கள் கோவி.செழியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)

ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் ஐக்கியம்!
வியாழன் 8, ஜனவரி 2026 5:54:09 PM (IST)

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!
வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:31:19 PM (IST)

நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இடிப்பு: இந்து முன்னணி குற்றச்சாட்டு!
வியாழன் 8, ஜனவரி 2026 12:14:32 PM (IST)

