» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா?

திங்கள் 22, ஏப்ரல் 2024 10:53:29 AM (IST)



நாகர்கோவில்  டவுன் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பயணிகள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை :  கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் உள்ள நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் தற்போது கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறது. இதற்கு காரணம் அனந்தபுரி ரயில் நாகர்கோவில் டவுண் நிலையத்தில் நின்று செல்லும் இயக்கப்பட்டு வருவதே காரணம் ஆகும். இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரை இயங்கிவந்த இன்டர்சிட்டி தினசரி ரயில் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டது.

தற்போது இந்த டவுன் ரயில் நிலையத்தை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். டவுன் ரயில் நிலையத்தின் 2022-23 ம் ஆண்டின் வருவாய் சுமார் 6.5 கோடி 6,57,82,453 ஆகும். வருவாய் அடிப்படையில் என்எஸ்ஜி-5 பிரிவு ரயில் நிலையமாகும் ஆண்டுக்கு சராசரியாக 2,13,396 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த ரயில் நிலையத்தின் வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில்  நடைமேடையில், முனைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் மதுரை – புனலூர் மற்றும் சென்னை – குருவாயூர் ஆகிய ரயில்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரயில்கள் டவுன் வழியாக இயக்குவதால்  வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் ரயில்வே துறை டவுன் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் படிப்படியாக செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் டவுன் ரயில் நிலைய வருவாய் அதிகரிப்பின் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில் நிலையத்தின் பரிவு என்எஸ்ஜி-5 லிருந்து என்எஸ்ஜி-4 க்கு மாற்றம் பெற்று விடும் என்பதில் சந்தேகம் இல்லை

தற்போது நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் பயன்பாட்டுக்கு உள்ளது. மூன்றாவது நடைமேடை இருவழிபாதை பணிகளின் போது சோதனை செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதனால் இந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் வழித்தடத்தில் சரக்கு ரயில்கள் வரும் போது பயணிகள் ரயில்கள் செல்ல வழி விட்டு மூன்றாவது நடைமேடையில் அதிக நேரம் நிறுத்தி வைக்க வசதி ஏற்படும். இது மட்டுமல்லாமல் சதாரண பயணிகள்  கன்னியாகுமரி மெமு ரயில் ;போன்ற ரயில்கள் ஒரு நடைமேடையில் நிறுத்தி வைத்துவிட்டு சூப்பர் பாஸ்ட் ரயிலான அனந்தபுரி ரயிலையும் வேறு ஒரு நடைமேடையில் நிறுத்தி வைக்க முடியும்.

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நான்கு மற்றும் ஐந்து நடைமேடை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இவ்வாறு நான்கு மற்றும் ஐந்து நடைமேடைகள் அமைக்கப்பட்டால் இங்கிருந்து சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க முடியும்.  தீபாவளி, கிறிஸ்துமஸ் , ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளின் போது ரயில்வே துறை அதிக அளவில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கும். இது போன்ற ரயில்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்த நடைமேடை பற்றாக்குறை காரணமாக திருநெல்வேலியுடன் நின்று விடுகின்றது.  இது போன்ற ரயில்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நிறுத்தி எளிதாக கையாள முடியும்.

தற்போது திருநெல்வேலி, நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகளில் தண்ணீர் பிடிக்கும் வசதி உள்ளது. நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக அதிக தினசரி ரயில்கள் மற்றும்  நீண்டதூர ரயில்கள் செல்கின்ற காரணத்தால் அனைத்து நடை மேடைகளிலும் ரயில் பெட்டிகளில் தண்ணீர் பிடிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலைக்கு இணைப்பு சாலை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் உள்ளது.  இதனால் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து அகலம் குறைந்து காணப்படுகின்றது. ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வந்துவிட்டால் அதிக பயணிகள் ஒரே நேரத்தில் வருகை தருகிறார்கள். இதனால் சாலைகளில் அதிக அளவில் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க  நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ள நான்கு வழி சாலைக்கு தனி அனுகு சாலை அமைக்க வேண்டும். ரயில் பயணிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அனுகு சாலை அமைக்கும் பட்சத்தில் நாகர்கோவில் நகருக்கு வெளி ஊர்களில் உள்ள மக்கள்  அதிலும் குறிப்பாக கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பக்தர்கள் நகரத்தில் உள்ள குறுகிய சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இந்த நான்கு வழி சாலை வழியாக  எந்தவித போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக பயணம் செய்ய முடியும். இவ்வாறு சாலை அமைக்கும் போது இரண்டாவது நுழைவாயில் அமைக்க வேண்டும் என்ற  கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

டவுன் வழியாக கூடுதல் ரயில்கள் கோரிக்கை

திருவனந்தபுரம் -நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலி நீட்டிப்பு: முழு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மார்க்கம் காலையில் அலுவல் நேரத்திற்கு செல்ல போதிய பயணிகள் ரயில்கள் இல்லாத காரணத்தால் திருவனந்தபுரத்திலிருந்து காலையில் புறப்படும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைக்கு ரயில்வே துறை பரிசீலிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த கோரிக்கை நிவிர்த்தி செய்யப்பட்டால் குறைந்த கட்டணத்தில் தினசரி திருநெல்வேலிக்கு வேலைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

இவ்வாறு நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் இந்த ரயில் திருநெல்வேலிக்கு அலுவலகங்களுக்கு செல்ல வசதியாக காலை 9:30 மணிக்கு செல்லத்தக்க வகையில் நாகர்கோவில் டவுண் வழியாக நீட்டிப்பு செய்து இயக்கப்படும்.  திருநெல்வேலிக்கு 10: 00 மணிக்கு மேல் சென்றால் இந்த ரயிலில் தினசரி பல்வேறு அலுவல் பணிகளுக்கு செல்லும் பயணிகள் பயணம் செய்ய மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் ரயில் கொச்சுவேலி வரை நீட்டிப்பு: திருநெல்வேலி மாவட்ட பயணிகள் காலையில் அலுவல் பணிகளுக்காக திருவனந்தபுரம் செல்வதற்கு வசதியாக திருநெல்வேலியிருந்து காலையில் நாகர்கோவில் இயக்கப்படும் பயணிகள் ரயில் கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலை நீட்டிப்பு செய்து இயக்கும் போது நாகர்கோவில் இன்று காலை 4:30 மணி முதல் 6:25 வரை திருவனந்தபுரம் மார்க்கம் ரயில் இல்லாத குறையை இது போக்கும் மட்டுமல்லாமல் பயணிகளுக்கும் திருவனந்தபுரம் செல்ல கூடுதல் சேவை கிடைக்கும். இந்த ரயில் நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் நாகர்கோவில் டவுண் வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory