» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அஜித்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது யார்? டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 4:02:21 PM (IST)
மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமாரிடம் யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. .
நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இறந்த அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து அஜித்குமார் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், போலீஸாரால் தாக்கப்பட்ட கோயில் ஊழியர் அஜித்குமார் என்ன தீவிரவாதியா?. ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை கூட ஏற்கலாம். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞரை கடுமையாக தாக்கியது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 1) மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி டிபேன் வாதிடுகையில், "இந்த சம்பவத்துக்கு பிறகு திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் அஜித்குமார் வீட்டுக்குச் சென்று ரூ.50 லட்சம் தருவதாகவும், போலீஸார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து அஜித்குமார் உயிரிழந்ததாக கூற வேண்டும் என சமரசம் பேசியுள்ளனர்.
போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார், விசாரணையின் போது தப்பி ஓட முயன்றது போது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக காவல் துறையினர் நாடகமாடியுள்ளனர்” என்றார்.
வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், "இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். தற்போது வரை அஜித்குமார் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அவரது தாயார், சகோதரரிடம் காவல்துறையினர் வழங்கவில்லை. அஜித்தை மடப்புரம் கோயில் பின்னால் வைத்து போலீஸார் சுற்றி நின்று தாக்குவதை ஒரு நபர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார்.” என்று கூறி அந்த வீடியோவை நீதிபதிகளிடம் வழங்கினார்.
இதையடுத்து நீதிபதிகள், "அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். அஜித்தை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை?. அவரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்?
ஏன் வெளி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறீர்கள்? அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் காவல்துறை சொல்ல மறுக்கிறீர்கள். யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும்.” என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகங்கை வழக்கில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
செவ்வாய் 1, ஜூலை 2025 7:46:56 PM (IST)

அஜித்குமார் விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய் 1, ஜூலை 2025 5:03:28 PM (IST)

வெற்றி நிச்சயம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 1, ஜூலை 2025 4:58:05 PM (IST)

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:43:56 PM (IST)

அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கும் போலீசார் : அதிர்ச்சி வீடியோ வெளியானது!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:23:07 PM (IST)

நள்ளிரவில் மின்சாரக் கட்டணத்தை 3.16% உயர்த்திய தமிழக அரசு: அன்புமணி கண்டனம்
செவ்வாய் 1, ஜூலை 2025 3:17:21 PM (IST)
