» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை உட்பட பல பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

சனி 6, ஏப்ரல் 2024 3:23:24 PM (IST)

நெல்லை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இதேபோல் தென்காசி, திருப்பூர், செய்யாறு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. பணம் பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறையினர் நேற்று தமிழகத்தில் 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று தொடங்கிய சோதனையானது நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அதன்பின்னர் சென்று விட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததார் ஆர்.எஸ். முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.

தொடர்ந்து பாளை பெருமாள்புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் என்.ஜி.ஓ. காலனி வீட்டில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே சோதனை நடத்தப்பட்ட நிலையில், விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெருமாள்புரம் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி வரையிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் அந்த அலுவலகத்தை வருமான வரித்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்.

அங்கு அதிகாரி ஒருவர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு யாரும் அந்த அலுவலகத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், அபிராமபுரத்தில் ஓய்வுபெற்ற செயற் பொறியாளர் தங்கவேலு வீடுகளில் 2வது நாளாக சோதனை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் அவிநாசியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் 'அ' பிரிவு, ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் வீடுகள் மற்றும் அவரின் பெட்ரோல் பங்கு, ஆர்.ஓ., வாட்டர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory