» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிசிடிவி கேமராக்கள் பழுதானதில் சந்தேகம்: டாக்டா் கிருஷ்ணசாமி அறிக்கை

வியாழன் 2, மே 2024 11:37:07 AM (IST)

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஒரே நேரத்தில் 93 கண்காணிப்பு கேமராக்கள் பழுதானதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன என அத்தொகுதி அதிமுக வேட்பாளா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 93 சிசிடிவி கேமராக்கள் ஏப். 30ஆம் தேதி மாலை 3 மணி அளவில் இடி, மின்னல் தாக்கி பழுதடைந்து விட்டதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஒரே கல்லூரியில் பேரவைத் தொகுதி வாரியாக வெவ்வேறு கட்டடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, 93 கண்காணிப்பு கேமராக்கள் ஒருசேர இடி மின்னல் தாக்கி பழுதடைந்து விட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லை.

சிசிடிவி கேமராக்கள் மாலை 3 மணிக்கு பழுதானதாக கூறப்பட்ட நிலையில் 5 மணி நேரத்திற்கு பிறகு, இரவு 8 மணி அளவில் தான் வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுகின்றன. இடைப்பட்ட 5 மணி நேரத்தில் என்னவெல்லாம் தவறு நடந்திருக்க கூடும் என்ற பல கேள்விகள் எழுகின்றன. மக்கள் தீா்ப்பை முறைகேடாக மாற்றி அமைக்கும் திட்டத்தில் எவா் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே, நீலகிரி, ஈரோடு தொகுதிகளில் இதுபோன்று சிசிடிவி கேமராக்கள் ஒரே நேரத்தில் பழுதடைந்ததாக வந்த செய்திகளை ஒப்பிட்டு பாா்க்கின்றபோது ஏதோ ஒரு பெரிய முறைகேட்டுக்கான வெளிப்பாடாக இருக்குமோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.இடி, மின்னல் போன்ற பாதிப்புகளால் மின்சார தடை ஏற்பட்டாலும் கூட தொடா் மின்சாரம் கிடைக்கக் கூடிய வகையில் ஆன்லைன் யு.பி.எஸ் மூலமாக அனைத்து சிசிடிவிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 5 மணி நேரம் தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து முழுமையாக அறிக்கையை தாக்கல் செய்வதற்கு தோ்தல் ஆணையஅதிகாரிகள், மாநில தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்டோா் உடனடியாக தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்து உண்மைத்தன்மை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory