» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஞ்., துணைத் தலைவர் தேர்தல் ரத்து: அதிமுகவினர் சாலை மறியல்

சனி 23, அக்டோபர் 2021 10:59:27 AM (IST)தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி புளியரை ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில்  12 வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

செங்கோட்டை ஒன்றிய அதிமுக  அம்மா பேரவை செயலாளர் சரவணன் என்பவரை ஆதரித்து 8 கவுன்சிலர்கள் வாக்களிக்க தயாராகி ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது  செங்கோட்டை  ஒன்றிய திமுக செயலாளர் ரவிசங்கர் தலைமையில் அங்கு கூடியிருந்த திமுகவினர்  அங்கு கூடியிருந்த அதிமுகவினர்  மீதும், 3 பெண்கள் உள்பட 8 கவுன்சிலர்கள் மீதும்  தாக்குதல் நடத்தினர். பெண் கவுன்சிலர்கள் சேலையை பிடித்து இழுத்தும் அவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.  

மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளே சென்று அதிகாரி கையில் இருந்த வேட்பாளர்களின் வேட்பு மனுவை பறித்து கிழித்து எறிந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக   செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான  கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா புளியரைக்கு நேரில் வந்து ஊராட்சி மன்ற அலுவலரிடம் முறையிட்ட போது அசம்பாவித சம்பவங்களால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதாம்.

இதனால் செங்கோட்டை கேரளா சாலையில் மாவட்ட செயலாளர்  கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில்  சாலை மறியல் நடைபெற்றது. தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். துணை காவல் கண்காணிப்பாளர் சாலை மறியலை கைவிட கோரி மாவட்ட செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு மாவட்ட செயலாளர் முடியாது என்று மறுக்கவே, மேலும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். மேலும் 8 கவுன்சிலர்கள்  உயிருக்கும் உடமைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முறையிட்டார். மேலும் மாநில தேர்தல் அலுவலக இணை இயக்குநரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு  விளக்கி கூறினார். பின்னர் அவர்களது உடமைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கும் என்றும் இன்று தேர்தல் நடைபெறாத இடங்களில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறும் என்று தெரிவித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம்  மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி கூறியதாவது: புளியரையில் நடைபெற்ற இந்த அராஜகம் ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் ஆணையம் மீதும் உள்ள நம்பிக்கையின்மயை காட்டுகிறது.  தேர்தல் அலுவலரிடம் இருந்து வேட்புமனுவை மீண்டும் மீண்டும் பிடுங்கி எறிந்த திமுக  நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பெண் கவுன்சிலர்களை சேலையை இழுத்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாங்கள் தோற்று விடுவோம் என்று தோல்வி பயத்தில் திமுகவினர் இந்த பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளனர்.  முதல்வர் ஸ்டாலின் நாங்கள் நல்ல ஆட்சி நடத்தி வருகிறோம் என்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு எடுத்துக்காட்டாக புளியரை சம்பவம் நடந்துள்ளது.

இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார். காவல்துறை கண்காணிப்பாளர் 8 கவுன்சிலர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார். மற்றும் மாநில தேர்தல் அலுவலக இணை இயக்குநர் தேர்தல் குறித்த தெரிவித்த கருத்துக்களை முன் வைத்து இந்த சாலை மறியல் கைவிடப்பட்டது என்று தெரிவித்தார்.  சாலைமறியலில்  செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் ராமசந்திரன், பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், முத்தழகு,  செங்கோட்டை ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் முருகேசன், சரவணன், அமர்நாத் மற்றும் கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory