» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

புதன் 31, டிசம்பர் 2025 8:09:13 AM (IST)

நவதிருப்பதி திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. சூரியனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், சந்திரனுக்கு அதிபதியாக நத்தம் விஜயாசனப் பெருமாள், புதனுக்கு அதிபதியாக திருப்புளிங்குடி காய்சின வேந்த பெருமாள், கேதுவுக்கு அதிபதியாக இரட்டை திருப்பதி அரவிந்தலோசன பெருமாள், ராகுக்கு அதிபதியாக தேவர்பிரான், சனிக்கு அதிபதியாக பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், சுக்கிரனுக்கு அதிபதியாக தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், செவ்வாய்க்கு அதிபதியாக திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், குருவுக்கு அதிபதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் என 9 தலங்களில் பெருமாள்கள் அருள்பாலிக்கின்றனர்.

இந்த நவத்திருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழா பகல்பத்து, இராப்பத்து திருவிழா என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. நேற்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இந்த 9 கோவில்களிலும் காலை 5மணி முதல் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்தில் அம்பாள்களுடன் பெருமாள்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சயனகுரடு மண்டபத்தில் உற்சவரான கள்ளபிரான் வைகுந்தவல்லி, சோரநாதநாயகி அம்பாள்களுடன் ஆதிஷேச வாகனத்தில் அர்த்தமண்டபத்தில் சயன திருக்கோலத்தில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை எழுந்தருளினார். இதேபோன்று, மற்ற நவதிருப்பதி கோவிலிகளிலும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் தேவியர்களுடன் அலங்கரிக்கப்பட்டு சயன கோலத்தில் காட்சி அளித்தனர்.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் சுவாமி தேவியர்களுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் நவதிருப்பதிகளில் குவிந்து கருடன் சந்நிதி முன்பு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் மாலை 3மணிக்கு சயன கோலம் கலையப்பட்டு, மாலை 4 மணிக்கு விஸ்வரூபம், மாலை 5.30 மணிக்கு 4 ஆயிரம் திவ்யபிரபந்த கோஷ்டி நடைபெற்றது. 

மாலை 6.30 மணிக்கு சொர்க்க வாசலுக்கு சுவாமி கள்ளபிரான் புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு தங்கதோழுகினியான் வாகனத்தில் சுவாமி கள்ளபிரான் எழுந்தருளி பக்தர்களின் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷங்களுக்கிடையே பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் உள்ளே நுழையும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் செயல் அலுவலர்கள் அ. அஜித், கோவல மணிகண்டன், சதீஷ், ஆய்வாளர்கள் நம்பி, நிஷாந்தினி, கள்ளபிரான் கோவில் ஸ்தலதார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory