» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைத்தாரருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி துவக்கம்!

செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:51:26 PM (IST)



குமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முதியோர்களின் வீடுகளுக்கு சென்று குடிமைப்பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத்துறையின் சார்பில் சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் இன்று (12.08.2025) "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமை பொருட்களை விநியோகம் செய்யப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை துவக்கி வைத்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் திடல் ஊராட்சிக்குட்பட்ட இரத்தினபுரம் மற்றும் தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட கீரிப்பாறை தொழிலாளர் நகர் பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்தோர் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் சென்று குடிமைப்பொருட்களை வழங்கி தெரிவிக்கையில்-  தமிழ்நாடு முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையின் போது முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள். இத்திட்டத்தின் நோக்கம் மாநிலத்தில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதேயாகும்.

அதனடிப்படையில் கூட்டுறவுத்துறையின் கீழ் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக்கடைகளுக்கு வந்து கைரேகை பதிவு செய்து, ரேசன் பொருட்களை வாங்க சிரமமாக இருப்பதையும், அவர்களுக்கு வீடு தேடி வந்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில் மாநிலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் 70 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன்பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று துவக்கி வைத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க நியாய விலைக்கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 764 நியாய விலைக்கடைகளைச் சார்ந்த 43730 குடும்ப அட்டைகளில் உள்ள 65343 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறன் பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்ஒருபகுதியாக இன்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்பட்ட கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெத்தினபுரம் பகுதி நேர நியாயவிலைக்கடை மற்றும் திடல் நியாய விலைக்கடைகளைச் சார்ந்த 55 குடும்ப அட்டைகளில் உள்ள 64 பயனாளிகளுக்கும், அழகியபாண்டியபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கீரிப்பாறை, பாலமோர், பரளியாறு போன்ற மலைப்பகுதிகளில் உள்ள 55 குடும்ப அட்டைகளில் உள்ள 89 பயனாளிகளுக்கும் அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட உள்ளது. மின்னணு எடைத்தராசு, e-Pos இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்து சென்று தகுதியுள்ள பயனாளர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், இணை பதிவாளர் கூட்டுறவு கடன் சங்கம் சிவகாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, துணை பதிவாளர் முருகன், தோவளை வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பூதலிங்கம், தடிக்காரன்கோணம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பிராங்கிளின், துறை அலுவலர்கள், பயனாளிகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory