» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சனி 9, ஆகஸ்ட் 2025 9:06:20 AM (IST)

கொல்லங்கோடு அருகே தனியார் பள்ளியில் பிறந்தநாளுக்காக கொடுத்த சாக்லேட் சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 11 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறை பொற்றை பகுதியில் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 1-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு நேற்று பிறந்த நாள். இதனால் அந்த மாணவி, பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆர்வத்துடன் சாக்லேட் கொடுத்தார். இதனை பெரும்பாலானவர்கள் உடனடியாக சாப்பிட்டனர்.

அந்த சமயத்தில் சாப்பிட்ட மறுவினாடியே 6-ம் வகுப்பு மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 8-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் அடுத்தடுத்து வாந்தி எடுத்ததோடு மயக்க நிலைக்கு சென்றனர். மேலும் சிலரும் மயக்கம் வருவதாக கூறியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த வகையில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனீஸ் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடமும் சிகிச்சை பற்றிய விவரத்தையும் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் சாப்பிட்ட சாக்லேட் பாக்கெட்டை ஆய்வு செய்த போது, அவை காலாவதியானது என்பது தெரிய வந்தது. அந்த பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர். 

இந்த பாக்கெட்டை ஆய்வுக்காக அனுப்ப உள்ளதாக தெரிகிறது. பிறகு விசாரித்ததில், சாக்லேட் பாக்கெட்டை மாணவியின் தந்தை காவல் நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த கடைக்கு சென்று போலீசார் விசாரித்தனர். மேலும் மார்த்தாண்டம் கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரித்தனர். காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்டதால் மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory