» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.47.58 கோடி கடன் : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்

வியாழன் 8, பிப்ரவரி 2024 3:07:55 PM (IST)



குமரி மாவட்டத்திற்குட்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.47.58 கோடி மதிப்பில் கடன்உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் இன்று (08.02.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கினார்.

விழாவில் அவர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வங்கி கடன் வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்கள்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 489 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.47.58 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 5312 சுயஉதவிக் குழுக்களும், நகர்ப்புர பகுதிகளில் 5926 சுயஉதவிக்குழுக்கள் உட்பட மொத்தம் 11248 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புர வாழ்வதார இயக்க திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சுயதொழில் மேற்கொள்ளுவதற்கு வங்கிகள் மூலம் கடன் இணைப்பு ஏற்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2023-2024-ஆம் ஆண்டிற்கு ரூ.578.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி ஊரக பகுதிகளில் செயல்படும் 3288 குழுக்களுக்கு ரூ.292.86 கோடியும் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் செயல்படும் 3200 குழுக்களுக்கு ரூ.231.98 கோடியும் ஆக மொத்தம் மொத்தம் 6488 குழுக்களுக்கு 31.12.2023 வரை ரூ.524.84 கோடி வங்கி இணைப்பு ஏற்படுத்தி வங்கிகடன் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான வங்கி நேரடி கடன், வட்டார வணிக வள மையம் கடன் மற்றும் சமுாய முதலீட்டு நிதி உட்பட மொத்தம் 489 சுயஉதவிக்குழுவிலுள்ள 923 பயனாளிகளுக்கு ரூ.47.57 கோடி கடன் வழங்கப்பட்டு மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 99% எய்தப்பட்டுள்ளது. 

மேலும் சுயஉதவிக்குழுவின் மூலம் காளான் வளர்ப்பு, சணல்நார் பைகள் தயாரித்தல், சிற்றுண்டி தயாரித்தல், அழகு கலை நிலையங்கள், சமையல்கலைகள் போன்ற தொழில்களை செய்து வருமானம் ஈட்டி வருகின்றார்கள். மேலும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் குறித்த நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் கடன் பெற்று சுயதொழில் மேற்கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் மேம்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு எஸ்.சி/ எஸ்.டி புத்தொழில் நிதித் திட்டம் மூலம் காணி பழங்குடி மகளிர் குழுவிற்கு தேன் விற்பனைக்காக ரூ.25 இலட்சம் வட்டியில்லா கடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்.

அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அதிகளவு கடனுதவிகள் வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், சிறந்த வங்கி கிளைகளுக்கு விருது மற்றும் ரொக்கப்பரிசினை வழங்கியதோடு, மூன்று பயனாளிகளுக்கு சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கான மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மகளிர் திட்ட இயக்குநர் மு.பீபீஜான், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் செல்வ குமார், உதவி திட்ட அலுவலர் பாலசுந்தரம், குழித்துறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பொன்.ஆசை தம்பி, மகளிர் திட்ட அலுவலர்கள், பணியாளர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory