» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மத்தியில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்: கனிமொழி எம்.பி. பேச்சு

செவ்வாய் 6, பிப்ரவரி 2024 4:14:18 PM (IST)



நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மத்தியில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – DMKManifesto2024’ என்று கோரிக்கை மனுக்களை மக்களை நேரில் சந்தித்து பெறும் பணியை தொடங்கியுள்ளது. திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் அமைந்துள்ள கெங்கா கிராண்டியூர் திருமண மண்டபத்தில்  மக்களிடம் இருந்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களைப் பெற்றனர். இரண்டாம் நாளான இன்று திமுகவின் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய ஆகிய 6 திமுக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள்  உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்களின் பரிந்துரையை கோரிக்கைகளை வழங்கினர். 

பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பல துறைகளை சார்ந்த சங்கங்களை சார்ந்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை சந்தித்து மக்களுடைய கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டு எழுதப்படக்கூடிய மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத்தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும்.

இப்போது அந்த வழியில் தொழிலாளர்கள், நம்முடைய முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களுடைய கட்டளைக்கு இணங்க தேர்தல் சார்ந்து தொழிலாளர், விவசாயிகள், மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்று இருக்கிறோம்.இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. மத்தியில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளை சிதைத்து கொண்டிருக்கிறது.

அதேபோல் மக்களை பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு நம்முடைய ஒற்றுமையை சிதைத்து, ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து, மக்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி, வேறு பிரச்சனைகளை கொண்டு வந்து அதை முன்வைத்து, மக்கள் அன்றாடம் சந்திக்கும் வேலைவாய்ப்பு இல்லாமை, விவசாய பிரச்சனை, மீனவர்களுடைய உரிமைகளை பறிக்கப்படுவதை மறக்கடிக்க செய்து வேறு ஒரு புதிய மதக்கலவரத்தையோ ஜாதி பிரச்சனைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள் தான்.

அதனால் இதை நாம் சரியாக புரிந்து கொண்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண நம்முடைய முதலமைச்சர் கட்டளைதான் இந்த தேர்தல் குழு. உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கை, அது மாநில அரசு சார்ந்ததாகவும் இருக்கலாம். மத்தியில் ஆட்சி நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையோடு, நாம் அந்த ஆட்சி மாற்றத்திற்கான உழைப்பை முதலில் செய்து கொண்டிருக்கிறோம்.

அந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதையும் நீங்கள் எங்களிடம் வழங்க வேண்டும். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சரால் உங்களுடைய வழிகாட்டுதலின் வழியே ஒரு ஆட்சி மாற்றம் இந்த நாட்டிலே உருவாகும். அந்த ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வோம். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திமுக மகளிரணி செயலாளரும்,முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

PalveruFeb 6, 2024 - 05:23:58 PM | Posted IP 162.1*****

karuthukanippugal maththiyil meendum BJP than atchiku varum Modi avargal than pratthmar aavargal enduru koorugirathe??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory