» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கும்பகோணத்தில் 11 மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்ற 2பேர் குமரியில் கைது

வெள்ளி 22, அக்டோபர் 2021 3:52:32 PM (IST)

கும்பகோணத்தில் 11 மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்ற இருவரை கன்னியாகுமரியில் தனிப்படை போலீஸார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி ஏழுமாந்திடல், நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் மீனாட்சி (30), இவரது கணவர் மைக்கேல் (35) இவர்களுக்குத் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சியை விட்டுவிட்டு மைக்கேல் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் மீனாட்சி ஊசி, பாசி விற்றுக் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி ஏழுமாந்திடலுக்கு வந்த மைக்கேல் தனது மனைவி மீனாட்சியிடம் குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்துள்ளதாகக் கூறியுள்ளார். குழந்தைகளை மைக்கேலுடன் அனுப்பினால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் ஊசி, பாசி வியாபாரத்துக்கு அழைத்துச்செல்லக்கூடும் என்பதால் மைக்கேலுடன் குழந்தைகளை அனுப்ப மீனாட்சி மறுத்துள்ளார். குழந்தைகளை அனுப்பவில்லை என்றால் அவர்களைத் தூக்கி சென்று விடுவேன் என மீனாட்சியை மைக்கேல் மிரட்டியுள்ளார். அதனைப் பார்த்த அப்பகுதியினர் மைக்கேலைக் கண்டித்தனர்.

மைக்கேல் குழந்தைகளைத் தூக்கிச் சென்று விடுவார் என்ற அச்சத்தில் மீனாட்சி 5 குழந்தைகளுடன் மாயமானார். இதனால் ஆத்திரமடைந்த மைக்கேல், மீனாட்சிக்கு ஆதரவாகப் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த், நாகம்மாள் தம்பதியின் 11 மாத ஆண் குழந்தையான சுலைமானைக் கடத்திச் சென்றுவிட்டார்.

இருநாட்களாகத் தேடியும் குழந்தை கிடைக்காததால், இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி நாகம்மாள் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உத்தரவின் பேரில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் குழுவினர் கடந்த நான்கு நாட்களாகத் திருப்பத்தூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களைச் சந்தித்து மைக்கேல் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மைக்கேல் குழந்தையுடன் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் மைக்கேலிடமிருந்த 11 மாத ஆண் குழந்தையான சுலைமானை மீட்டனர். இதையடுத்து மைக்கேலையும், அதற்கு உதவியாக இருந்த அவரது நண்பர் ஆறுமுகம் (35) என்பவரையும் கைது செய்து பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ’’மைக்கேல் சுலைமானைக் கடத்தி வைத்துக்கொண்டு அதன் மூலம் தனது மனைவியை மிரட்டி 5 குழந்தைகளைப் பெறத் திட்டமிட்டிருந்தார் என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory