» செய்திகள் - விளையாட்டு » உலகம்
துபாய் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: பைலட் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:48:55 AM (IST)

துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் தேஜஸ் போர் விமான விபத்து குறித்து துறைரீதியான விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
துபாயில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவில் விமானக் கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது.அந்த வகையில், துபாயின் அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமானக் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் உலகின் பல நாடுகளில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட விமானம் மற்றும் ட்ரோன் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்தன.
200-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அணிவகுத்து நின்றன. இதையொட்டி, 12 கருத்தரங்குகளும் நடைபெற்றன. அதில் 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, விமானத் தொழில்நுட்பம் தொடர்பான தங்களது கருத்துகள், ஆலோசனைகள், தொலைநோக்குத் திட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், 5 நாள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, இந்தியா சார்பில் உள்நாட்டுத் தயாரிப்பான எச்ஏஎல் நிறுவனத்தின் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டது. விமானக் கண்காட்சியின்போது, விமானங்களின் அணிவகுப்பு, சாகசக் நிகழ்ச்சியும் நடத்தப்படும். இதில் பல நாடுகளை சேர்ந்த சாகசக் குழுவினர் பங்கேற்பார்கள். விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்தியாவின் தேஜஸ் விமானமும் சாகசத்தில் ஈடுபட்டது.
வான் சாகசம் செய்து காட்டுவதற்காக தேஜஸ் போர் விமானம் நேற்று மதியம் 2.10 மணி அளவில் புறப்பட்டது. வானில் தலைகீழாக பறந்தும், சுழன்றும் சாகசம் நிகழ்த்தியபோது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது. பயங்கர சத்தத்துடன் தரையில் மோதிய விமானம், சிறிது தூரம் சறுக்கிச் சென்று வெடித்துச் சிதறியது.
சாகசத்தில் ஈடுபட்ட விமானம், கண்ணுக்கு எதிரே தீப்பிழம்பாக எரிவதைப் பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். துபாய் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பைலட் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு: தேஜஸ் போர் விமான விபத்து குறித்து துறைரீதியான விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. தேஜஸ் போர் விமானம், வான் பாதுகாப்பு, ஏவுகணைகள் மூலம் தாக்குதல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யும் 4.5-ம் தலைமுறை போர் விமானம் ஆகும்.
உலகில் உள்ள அனைத்து போர் விமானங்களில் மிகச் சிறியது மற்றும் மிக எடை குறைவானது தேஜஸ் போர் விமானம். கடந்த 2001-ம் ஆண்டு இந்த விமானம் தயாரிக்கப்பட்ட போது, தனது முதல் பறக்கும் சோதனையில் விபத்தை சந்தித்தது. அப்போது பைலட், பாதுகாப்பாக வெளியேறிதப்பினார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ஜெய்சல்மரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோதும் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதன் 23 ஆண்டு கால வரலாற்றில் 3-வது முறையாக தேஜஸ் விமானம் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விமானத்தில் மார்டின் - பேக்கர் ஜீரோ-ஜீரோ எஜெக்ஷன் சீட் பொருத்தப்பட்டுள்ளது.
தரையில் இருந்து புறப்படும்போதும், தாழ்வான உயரத்தில் பறக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்தாலும், பைலட் உடனடியாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறி பத்திரமாக தரையிறங்கும் வசதி உள்ளது. அப்படியிருந்தும், துபாயில் நடைபெற்ற விபத்தில் பைலட் உயிரிழந்துள்ளார். இதற்கான காரணம் விசாரணை அறிக்கையில் தெரியவரும். விபத்தில் உயிரிழந்த பைலட் குடும்பத்தினருக்கு, விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் ஒலித்த தமிழ் பாடல்: கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி
சனி 22, நவம்பர் 2025 11:21:11 AM (IST)

இந்தியாவுக்கு ரூ.823 கோடி ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 11:02:16 AM (IST)

ஒரே இரவில் 470 ட்ரோன், 48 ஏவுகணை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: ஜெலன்ஸ்கி கண்டனம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:04:16 PM (IST)

ரஷ்யாவுக்கு நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் மீது கடும் நடவடிக்கை : டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:54:26 AM (IST)

வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திங்கள் 17, நவம்பர் 2025 4:04:28 PM (IST)

சவுதி அரேபியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்து : 42 இந்தியர்கள் பலி
திங்கள் 17, நவம்பர் 2025 11:59:28 AM (IST)


.gif)