» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!

செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)



கடையை மூடிவிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும் என்று ஸ்பேக் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்குக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் பணக்காரர் வரிசையில் முன்னணியில் உள்ள தொழிலதிபரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும், கடந்த சில நாள்களாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சமடைந்து, இருவரையும் மாறி மாறி பகிரங்கமாக பொது வெளியில் பேசிக்கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதிபரானதும், அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசு செயல் திறன் துறை (’டாக்ஜ்’) என்ற துறையை உருவாக்கி அதற்கு எலான் மஸ்கை தலைவராக்கி அழகுபார்த்திருந்தார் அதிபர் டிரம்ப்.

இருவரும் சேர்ந்து அமெரிக்க ஆட்சியை நடத்திக்கொண்டிருந்த நிலையில்தான், இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. டோக் துறையின் தலைமையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் கடந்த மே 29-ஆம் தேதி திடீரென அறிவித்தார்.

இந்த நிலையில், டிரம்ப் கொண்டு வந்த வரி விதிப்பு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்து வந்தார். இதனால், இவர்களது சண்டை வெளிச்சத்துக்கு வந்தது. டிரம்ப்பும், மஸ்கின் பங்களிப்பு இல்லாமல் தனது அரசு வெற்றிகரமாக செயல்படும் என்றார்.

அதைத் தொடர்ந்து, எலான் மஸ்குக்குச் சொந்தமான டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தனது அரசின் ஆதரவை இழக்கலாம் என்று டிரம்ப் எச்சரித்தார். இந்தப் பதிலுக்கு பதில் தாக்குதல் கடந்த வாரம் முழுக்க சூடுபிடித்திருந்த நிலையில், திடீரென எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, மின்சார வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். இதனால், கோபடைந்த டிரம்ப் மீண்டுமொரு புதிய பிரச்சினையாக எலான் மஸ்க், தன்னுடைய கடைகளை மூடிவிட்டு மீண்டும் தன்னுடைய சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "நான் அதிபராகவதற்கு முன்பில் இருந்தே மின்சார வாகனங்களுக்கான மின்சார வாகன ஆணையை கடுமையாக எதிர்க்கிறேன் என்பதை அவர் அறிந்தவர். மின்சார கார் பயனுள்ளதுதான். ஆனால், அனைவரையும் வாங்க வற்புறுத்தக்கூடாது.

வரலாற்றிலேயே இதுவரை யாரும் அனுபவிக்காத அதிகளவிலான வரிச்சலுகையை எலான் அனுபவித்துள்ளார். இந்த மாதிரியான வரிச்சலுகைகள் இல்லாவிட்டால், எலான் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.

அப்படியானால் இனி ராக்கெட்களை விண்வெளிக்குச் செலுத்துதல், செயற்கைக்கோள்கள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது. இதன்மூலம், எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பணம் சேமிக்கப்படும். அரசு செயல் திறன் துறைக்கும் நல்லதுதான்” எனப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory