» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட், ராமர் கோவில் விவகாரங்களால் கடும் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

திங்கள் 20, ஜூலை 2026 4:23:28 PM (IST)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே, நீட் தேர்வு சர்ச்சை மற்றும் அயோத்தி ராமர் கோவில் விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் நடத்திய கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல கோரிக்கைகளை முன்னிறுத்திப் போர்க்கோலம் பூண்டிருந்தன. இன்று காலை மக்களவை தொடங்கியதும், சபாநாயகர் ஓம் பிர்லா மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தார். இரங்கல் குறிப்புகள் வாசித்து முடிக்கப்பட்ட உடனே, நீட் தேர்வு முறைகேடுகள், அயோத்தி ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்குத் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

அவையின் சலசலப்பிற்கு இடையே, சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களைத் தங்களது இருக்கைகளுக்குச் சென்று அமைதி காக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார். எனினும் எதிர்க்கட்சியினரின் முழக்கங்கள் நீடித்ததால் சபாநாயகர் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அங்கும் அவை நடவடிக்கைகள் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்:

முன்னதாக, காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், ராமர் கோவில் அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியிருந்தார். அதேபோல், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்களின் தொடர் போராட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி அவையில் தனியாக நோட்டீஸ் அளித்திருந்தனர்.

காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு:

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கத் தற்போதைய அரசு தயாராக இல்லை என்பது கடந்த சில நாட்களாகவே தெளிவாகப் புலப்படுவதாகக் குற்றம் சாட்டினார். ராமர் கோவில் விவகாரமோ அல்லது நீட் விவகாரமோ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பதை அரசால் இதுவரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றும், இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முக்கியப் பிரச்சினைகள் இவைதான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும் சூழலில் அரசிடம் முறையான விவாதத் திட்டம் இல்லை என்றும் சாடினார்.

ஜந்தர் மந்தரில் தடியடி - பதற்றம்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள சூழலில், டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்று தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப் பேரணிக்கு நேற்றே அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டு, அப்பகுதியில் டெல்லி போலீசார், மத்தியப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் தடைகளையும் மீறி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியைத் தொடங்க போராட்டக்காரர்கள் முனைப்பு காட்டியதால், டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டிருந்தவர்கள் மீது டெல்லி போலீசார், மத்தியப் படையினர் அதிரடியாகத் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இச்சம்பவத்தால் டெல்லி நாடாளுமன்றச் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory