» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொன்முடி விவகாரம்: தமிழக ஆளுநருக்கு நாளை வரை உச்ச நீதிமன்றம் அவகாசம்!

வியாழன் 21, மார்ச் 2024 4:57:19 PM (IST)

அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கே. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுக்கும் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் "கவலைதருவதாக" உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்தும் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆளுநர் ரவி மீறுகிறார் என்றும் மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் மூன்று பேர் அடங்கிய அமர்வு, பொன்முடி மீண்டும் பதவியேற்பது அரசியல் சாசன நெறிமுறைக்கு எதிரானது என ஆளுநர் எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பியது. ஆளுநர் ரவியின் நடவடிக்கை மிகுந்த கவலையளிக்கிறது. நாங்கள் இதை நீதிமன்றத்தில் உரக்கச் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அவர் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுகிறார். இவருக்கு யாரோ அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இவருக்கு சரியான அறிவுரையை வழங்கவில்லை. 

தற்போது ஆளுநருக்கு தெரிவியுங்கள், உச்ச நீதிமன்றம் ஒரு தண்டனையை நிறுத்திவைத்தால், அந்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதாக அர்த்தம் என்றும் தெரிவித்துள்ளது. நாளை வரை அவகாசம் அளிக்கிறோம், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் விட்டால், ஆளுநர் அரசியல் சாசனத்தின்படி செயல்படுமாறு உத்தரவிட நேரிடும் என்றும் அட்டர்னி ஜெனரலிடம் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும், பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் நாளை வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்றும், நாங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கவில்லை, ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பதவிப் பிரமாணத்துக்கு தமிழக ஆளுநர் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் என்ன செய்கிறார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. தமிழக அரசு பல்வேறு வாதங்களை முன்வைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்துகளை பதிவு செய்துள்ளது. ஆளுநருக்கு அறிவுரை கூறியவர்கள், சரியான அறிவுரைகளை வழங்கவில்லை. 

அரசமைப்புச் சட்டப்படி செயல்பட ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிப்போம் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். வழக்கு விசாரணையின்போது, ஆளுநரின் செயல்பாடுகளை நியாயப்படுத்த விரும்பவில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 11ஆம் தேதி உத்தரவிட்டது. பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கி தமிழக சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பி இருந்தார்.

முதல்வரின் கடிதத்துக்கு பதிலளிக்காமல் 4 நாள்கள் பயணமாக தில்லி சென்ற ஆளுநர் கடந்த வாரம் சனிக்கிழமை சென்னை திரும்பிய நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்று நடந்தது இல்லை என்று தமிழக அரசு வாதம் முன்வைத்தது. வேண்டுமென்றே கால தாமதம் செய்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுநர் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பொன்முடி எம்எல்ஏவாக தொடர்கிறார். அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆனால், பதவிப் பிரமாணத்தை மறுப்பது போன்ற செயல் கடந்த 75 ஆண்டுகாலத்தில் நடந்தது இல்லை என்று தமிழக அரசு வாதிட்டது.

அப்போது, அமைச்சர் பொறுப்பு வழங்க மறுப்பதை அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகக் கூற முடியாது, தமிழக அரசின் மனு ஏற்புடையது அல்ல, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆளுநர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. நாங்கள் கண்களை மூடிக்கொள்ளவில்லை. அரசியலமைப்புச் சாசனத்துக்கு எதிரான செயல்பாடுகள் உங்களுடையது என்று இதற்கு உச்ச நீதிமன்றம் பதிலளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory