» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விவசாயி மரணத்தில் நீதி கிடைக்கும் வரை இறுதி சடங்கு கிடையாது: விவசாய சங்கம் அறிவிப்பு

சனி 24, பிப்ரவரி 2024 10:26:41 AM (IST)



டெல்லி போராட்டத்தில் விவசாயி கொலை செய்யப்பட்டு உள்ளார் என எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2020-ம் ஆண்டு இறுதியில் டெல்லி சலோ என்ற பெயரில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர்.

பலகட்ட பேச்சுவார்த்தை நிறைவில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது என மத்திய அரசு முடிவு செய்து, 2021-ம் ஆண்டு அதனை அறிவித்தது. அப்போது, வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின்னர் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதன்படி, டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்காக பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லி நோக்கி சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த போராட்டம் கவனம் பெற்றுள்ளது.

விவசாய சங்கத்தினர் மத்திய மந்திரிகளுடன் 8, 12, 15 மற்றும் 18 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும், அது தோல்வியிலேயே முடிந்தது. 4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, பருப்புகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு அமைப்புகள் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என மத்திய அரசு முன்மொழிந்தது. இதுபற்றி விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முன்வந்தது.

ஆனால், இது விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என கூறி, அரசின் இந்த முடிவை விவசாயிகள் ஏற்காமல், நிராகரித்து விட்டனர். இந்த சூழலில், 5-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்தது. எனினும், டெல்லி நோக்கி பேரணியாக செல்வது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை விவசாயிகள் வெளியிட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தரப்பில் முடிவானது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தின்போது, டிராக்டர்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்தினர். இதனை கொண்டு தடுப்பான்களை உடைத்து முன்னேற திட்டமிட்டது தெரிய வந்தது. இதற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தின்போது, கல் வீச்சு சம்பவமும் நடந்துள்ளது.

இந்த போராட்டத்தில், பஞ்சாப்-அரியானா எல்லை பகுதியில் போராடிய விவசாயி ஒருவர் மரணம் அடைந்து உள்ளார் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், விவசாயி கொலை செய்யப்பட்டு உள்ளார் என கூறி, எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் செய்தியாளர்களிடம் பேசும்போது, கானவுரி எல்லையில் விவசாயி மரணத்தில், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் என கூறினார். டெல்லி போராட்டத்தில் விவசாயி மரணம் அடைந்ததற்காக, வெள்ளிக்கிழமை ஒருநாள் கருப்பு தினம் அனுசரிப்பது என்று விவசாய சங்கம் முடிவு செய்தது. இதன்படி, நேற்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறும்போது, அரியானா போலீசாருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டும். விவசாயி மரணத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக பிரிவு 302 ஐ.பி.சி.யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.அவருக்கு நீதி கிடைக்கும் வரை இளைஞரின் உடலை நாங்கள் தகனம் செய்யமாட்டோம். அரியானா போலீஸ் மற்றும் இளைஞரை துப்பாக்கியால் சுட்ட துணை ராணுவ படையினருக்கு எதிராக புகார் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

கானவுரி எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவரான சுபகரண் சிங்கின் கழுத்தில் பின்புற பக்கத்தில் காயம் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டார். தொடர்ந்து அவர் கூறும்போது, விவசாயிகளின் போராட்டத்தில் தர்சன் சிங் (வயது 62) என்பவர் மரணம் அடைந்து உள்ளார். இவர் போராட்டத்தில் உயிரிழந்த 4-வது நபர் ஆவார் என பாந்தர் கூறினார்.டெல்லியில் மார்ச் 14-ந்தேதி மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory