» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக பள்ளிகளில் கன்னட மொழி வாழ்த்து ரத்து: அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை

வியாழன் 22, பிப்ரவரி 2024 11:27:18 AM (IST)

கர்நாடக பள்ளிகளில் கன்னட மாநில மொழி வாழ்த்து பாடுவது குறித்த சுற்றறிக்கையில், தனியார் பள்ளிகளை குறிப்பிடாததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

கர்நாடகாவின் அனைத்து உறைவிடப் பள்ளிகளிலும், ஆன்மிக வழிபாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் கொண்டாடக் கூடாது என்று சில நாட்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது. பா.ஜ.,வின் கடும் எதிர்பார்ப்பால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளிகளின் நுழைவுப்பகுதியில் இருந்த 'அறிவு கோவில் இது, கை கூப்பி உள்ளே வா' என்ற கவிஞர் குவெம்பு வரிகளை 'அறிவு கோவில் இது, தைரியத்துடன் கேள்வி கேள்' என்று மாற்றி எழுதியதால், பெரும் சர்ச்சை எழுந்தது.பா.ஜ., - ம.ஜ.த.,வின் தொடர் எதிர்ப்பால், பழையபடி மீண்டும் எழுதுவதற்கு உத்தரவிடப்பட்டது. இந்த பிரச்னை இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நடந்தது.

இந்த நிலையில் கவிஞர் குவெம்புவின் 'ஜெய பாரத ஜனனிய தனுஜாதே' என்ற கன்னட மொழி வாழ்த்துப் பாடல், மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளின் வகுப்புகள் நடத்தும் முன்பும்; அரசு, அரசு பொது நிறுவனங்கள், வாரியங்களின் நிகழ்ச்சிகள் நடத்தும் முன்பும் பாட வேண்டும் என, 2004ல் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், இம்மாதம் 16ம் தேதி, கன்னட கலாசார துறை புதிய சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இந்த அறிக்கையில், மொழி வாழ்த்து பாடுவது குறித்த வழிகாட்டுதலில் தனியார் பள்ளிகள் இடம்பெறவில்லை.இதனால், 'மொழி வாழ்த்து பாடுவது தனியார் பள்ளிகளுக்கு கட்டாயமில்லையா? பள்ளிகள் விஷயத்திலேயே இந்த அரசு அடிக்கடி விளையாடுகிறது' என கூறி பா.ஜ.,வினர் நேற்று கொந்தளித்தனர்.

கன்னட கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறுகையில், 'அச்சு பிழை ஏற்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். மதியத்துக்குள் திருத்தப்பட்ட புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும்,'' என்றார். அதன்படி, திருத்தப்பட்ட புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விஷயம், நேற்று சட்டசபையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசின் செயல்பாட்டுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட பா.ஜ.,வினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், பேசியதாவது:ஒரு வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றறிக்கை தவறாக வெளியிடப்பட்டுள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அமைச்சர், திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட செய்துள்ளார். தற்போது குழப்பம் நீங்கியுள்ளது. தவறாக சுற்றறிக்கை வெளியிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory