» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சட்ட நிபுணர் ஃபாலி நாரிமன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதன் 21, பிப்ரவரி 2024 5:28:01 PM (IST)

சட்ட நிபுணர் ஃபாலி நாரிமன் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஃபாலி நாரிமன், இன்று அதிகாலை 12.45 மணி அளவில் டெல்லியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

1929ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்த நாரிமன், 1950ல் பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 1972ம் ஆண்டு மே மாதம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

போபால் விஷவாயு விபத்து வழக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட வாதாடியவர். 1999ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஃபாலி நாரிமன், பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளைப் பெற்றவர். இவரது மகன் ரோஷிண்டன் நாரிமன், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.

ஃபாலி நாரிமனின் மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மிகச் சிறந்த சட்ட நிபுணர்கள் மற்றும் அறிவுஜீவிகளில் ஃபாலி நாரிமனும் ஒருவர். சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.” என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory