» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் பரிசோதனை வெற்றி

புதன் 21, பிப்ரவரி 2024 5:11:27 PM (IST)

விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா விண்வெளி துறையில் பல அரிய சாதனைகளை படைத்துள்ளது. நிலவுக்கு சந்திரயான் விண்கலம், சூரியனுக்கு ஆதித்யா-எல்1 விண்கலம் ஆகியவற்றை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இதேபோன்று, விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் ககன்யான் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம், மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப கொண்டு வருவது ஆகும். நடப்பு ஆண்டில் இலக்கை அடைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும்.

இந்த நிலையில், விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இதனால், ககன்யான் திட்டத்தில் பெரிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம்.

இதுபற்றி இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், இஸ்ரோவின் சி.இ.20 கிரையோஜெனிக் இயந்திரம் தற்போது, ககன்யான் திட்டங்களுக்காக விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்ல கூடிய திறன் பெற்றுள்ளது என்று தெரிவித்து உள்ளது.

கடுமையான பரிசோதனைகள் இயந்திரத்தின் உறுதி தன்மையை நிரூபித்து உள்ளது. முதல் ஆளில்லா விமானம் எல்.வி.எம்.3 ஜி1-க்காக அடையாளம் காணப்பட்ட சி.இ.20 இயந்திரம், ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை கடந்து வந்துள்ளது.

அதிக உயரத்தில் பரிசோதனை செய்வதற்கான வசதி கொண்ட, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவன வளாகத்தில் கடந்த 13-ந்தேதி, இறுதி பரிசோதனை நடந்தது. 7-வது முறையாக நடந்த இந்த தொடர் பரிசோதனையின்படி, வெற்றிடத்தில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், இயந்திரம் ஆனது வெப்பப்படுத்தி பார்க்கப்பட்டது. அது பறக்கும் நிலையை தூண்டுவதற்கானது என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, சி.இ.20 இயந்திரம் மனிதர்களை சுமந்து செல்வதற்கான தரைப்பகுதி தகுதி பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அதில், உயிர்வாழ்வதற்கான விளக்க பரிசோதனைகளும் நடந்தன. நீடித்து உழைக்க கூடிய பரிசோதனைகள் மற்றும் செயல்பாட்டு திறன் பரிசோதனை, குறைந்த அளவிலான இயக்கத்தின் கீழ் அதன் செயல்பாடு என அனைத்து தரைவழி பரிசோதனைகளும் நிறைவடைந்து அதில் வெற்றியும் கிடைத்துள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory