» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சண்டிகார் மேயர் தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 4:45:16 PM (IST)

வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதை அடுத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. 

பஞ்சாப் - அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகார் உள்ளது. இதனிடையே, சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர்.

வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷி எண்ணினார். காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார

ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் மனோஜ் சோன்கர் சண்டிகார் மேயராக பதவியேற்றார்.

இதனிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 5-ந்தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மஷியை கடுமையாக எச்சரித்தது. தேர்தல் நடத்திய அதிகாரி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டதாக விமர்சித்தது. மேலும், சண்டிகார் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரையும் காலவரையின்றி ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

சண்டிகார் மேயர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "சண்டிகார் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்துள்ளது. அதனால், ஆவணங்களை நாங்களே ஆய்வு செய்யப்போகிறோம். சண்டிகார் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளையும், வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான வீடியோவையும் நாங்கள் 20-ந்தேதி (இன்று) ஆய்வு செய்வோம். 

தேர்தல் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதன்படி இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சண்டிகார் மேயர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது. செல்லாத வாக்குகள் என்று தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளையும் சேர்த்து மீண்டும் எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory