» சினிமா » செய்திகள்

தெலுங்கு நடிகர் சங்கத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகல்!!

திங்கள் 11, அக்டோபர் 2021 5:33:23 PM (IST)

தெலுங்குத் திரைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணியும், நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு விஷ்ணு மஞ்சுவும், பிரகாஷ்ராஜும் போட்டியிட்டனர். பிரகாஷ்ராஜ் தலைமைக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு அளித்தனர். 

விஷ்ணு மஞ்சுவுக்கு அவரது அப்பா மோகன்பாபு, அவரது ஆதரவாளர்கள், முன்னாள் சங்க நிர்வாகி நடிகர் நரேஷ் உள்ளிட்டவர்கள் ஆதரவு அளித்தனர். இந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்துள்ளார். வழக்கமாகப் பெரிய பரபரப்பு இல்லாமல் நடக்கும் இந்தத் தேர்தல் இம்முறை அதிக ஊடக வெளிச்சத்தில், அரசியல் கட்சிகள் பங்குபெறும் தேர்தல் போலவே நடைபெற்றது. பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, வெளியிலிருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற பிரச்சாரமே விஷ்ணு மஞ்சு தரப்பால் முன்வைக்கப்பட்டது.

பிரகாஷ்ராஜின் தோல்விக்கு இந்தப் பிரச்சாரமே காரணம் என்று திரைத்துறையினர் கருதுகின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் திங்கட்கிழமை காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரகாஷ்ராஜ், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சங்கத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ்ராஜ் பேசியதாவது: "நான் 21 வருடங்களாக இந்தச் சங்கத்தில் இருக்கிறேன். ஆனால், என்னை வெளியிலிருந்து வந்த ஆள், விருந்தினர் என்று அடையாளப்படுத்தியே தேர்தலில் தோற்கடித்திருக்கின்றனர். தீவிரவாதி, சமூகத்துக்கு எதிரானவன் என்றெல்லாம் சொன்னார்கள். திரைத்துறையினர் இப்படி ஒரு விஷயத்தைச் சொன்னது என்னைக் காயப்படுத்தியது.

எதிர்த் தரப்பில் ஜெயிப்பதற்கு அவர்கள் அதைச் சொன்னாலும் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அதையே ஆதரிப்பதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், இப்படி ஒரு நோக்கத்துடன் இருக்கும் சக கலைஞர்களுடன் என்னால் இருக்க முடியாது. எனவே நான் என் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால், நான் தொடர்ந்து தெலுங்குத் திரைப்படங்களில் நடிப்பேன். விஷ்ணு மஞ்சுவுடன் நடிக்கக் கூடத் தயாராக இருக்கிறேன்.

நான் தெலுங்கு மாநிலத்தில் பிறக்காதது என் தவறல்ல. துரதிர்ஷ்டமே. இந்தத் தோல்வியை ஏற்றுக்கொண்ட பின்னரே ராஜினாமா செய்கிறேன். எனக்கும் தன்மானம் உள்ளது. அதனால் அவர்கள் என்னை விருந்தினராகப் பார்ப்பதால் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். இப்படிப் பாகுபாடு காட்டுபவர்களோடு என்னால் இருக்க முடியாது".இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார்.

முன்னதாக, பிரகாஷ்ராஜை இந்தத் தேர்தலில் ஆதரித்த, நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவும் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார். சாதி ரீதியாகவும், மாநில மொழி ரீதியாகவும் அதிகப் பாகுபாடு காட்டப்படுவதால் இம்முடிவை எடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.


மக்கள் கருத்து

ராஜாOct 11, 2021 - 05:36:06 PM | Posted IP 173.2*****

தமிழன் போல் எல்லாரும் இளிச்சவாயன்களாக இருக்க மாட்டார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory