» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்று அசத்தல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:11:13 PM (IST)

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்று அசத்தினார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதிகபட்சமாக இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர். தாமதமாக விண்ணப்பித்து விசா கிடைக்காததால் 28 பேர் கொண்ட ஈரான் அணி கடைசி நேரத்தில் விலகியது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனை இஷா சிங் 239.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றார். சீன தைபேயின் செங் யென் சிங் (235.4 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், யூ அய் வென் (217.7 புள்ளி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். இந்தியாவின் சுருச்சி சிங் (197.7) 4-வது இடமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரம் மானு பாக்கர் (135.3) 7-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் சுருச்சி சிங் (576), மானு பாக்கர் (575), இஷா சிங் (575) ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி 1,726 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. வியட்நாம் (1,713) வெள்ளிப்பதக்கத்தையும், சீன தைபே அணி (1,711) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றன.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்குள் நுழைந்த உலக சாம்பியனான இந்திய வீரர் சம்ரத் ராணா இறுதிப்போட்டியில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அவர் 220.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் விளாடிமிர் ஸ்வெச்னிகோவ் (242), கஜகஸ்தானின் வலேரி ரகிம்ஜான் (241) முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினர்.
இதன் அணிகள் பிரிவில் சம்ரத் ராணா (581), ஷர்வன் குமார் (578), வருண் தோமர் (573) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,732 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ்தான் அணி (1,732) தங்கப்பதக்கத்தையும், கஜகஸ்தான் அணி (1,731) வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றின.
ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவின் கவின் அந்தோணி (240.9 புள்ளி) முதலிடமும், கஜகஸ்தானின் இமான்டோஸ் பெக்டெனோவ் (236.7) 2-வது இடமும், இந்தோனேசியாவின் மாருப் ஆலியா (215.6) 3-வது இடமும் பிடித்தனர். இதன் அணிகள் பிரிவில் இந்தியா (1735) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. நேற்றைய பந்தயங்கள் முடிவில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யு19 உலகக் கோப்பையில் இந்திய அணி புதிய சாதனை அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 11:47:26 AM (IST)

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் 2026 அட்டவணை
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:04:12 AM (IST)

டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் : பாகிஸ்தான் அறிவிப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:49:49 AM (IST)

யூ19 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:43:52 AM (IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா!
சனி 31, ஜனவரி 2026 5:51:55 PM (IST)

மகளிர் பிரீமியர் லீக்: ஓர் இடத்துக்குப் போட்டியிடும் 3 அணிகள்!
சனி 31, ஜனவரி 2026 4:50:16 PM (IST)

