» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அரசு உதவவில்லை : தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஆதங்கம்!

திங்கள் 9, ஆகஸ்ட் 2021 5:31:10 PM (IST)

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் 120 ஆண்டுகால கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா.

இவர் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கத்தை வென்றது, டோக்கியோவில் தங்கம் வென்ற முதல் வீரர், 2008ம் ஆண்டிற்குப் பிறகு தனிப்பிரிவில் தங்கம் வென்ற வீரர் என தனது ஈட்டியால் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் ஒரே தங்கத்தில் இந்திய வரலாற்றுக்கு புதிய சரித்திரத்தையும் எழுதியுள்ளார்.

இவரின் இந்த புதிய வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்தியாவே இவரின் வெற்றியைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே ஹான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்தவர் உவே ஹான். இவர் 1984ல் 100 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தார். இவரின் இந்த சாதனையை இது வரையாரும் முறியடித்ததில்லை. இவர் தான் நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் தான் கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த போது இந்திய விளையாட்டுத்துறை மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த சந்திப்பின் போது, உவே ஹான், "இந்திய விளையாட்டு ஆணையம் (SAI),தடகள சம்மேளனம் (AFI) தங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை.

ஒலிம்பிக்கிற்கான பயிற்சி குறித்து எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. மேலும், விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவையும் கொடுக்கவில்லை. தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்திய அதிகாரிகள் மிரட்டினர். மேலும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆசிய மற்றும் மாமன்வெல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் அவரை JSW நிறுவனமே ஸ்பான்சர் (Sponsor) அளித்து உதவியது. இவரின் வெற்றி மட்டுமே இவரை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

நான் பயிற்சியாளராக வந்தபோது என்னால் ஏதாவது மாற்ற முடியும் என நினைத்தேன். ஆனால் விளையாட்டு குறித்து அரசின் செயல்பாடுகளைப் பார்த்த போது அது மிகவும் கடினம் என தெரிந்து கொண்டேன்” என வேதனையுடன் தெரிவித்திருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory