» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் முதல்வன் திட்டப் பதிவுகள் அழிப்பு: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

சனி 20, ஜூன் 2026 3:33:26 PM (IST)

'நான் முதல்வன்' திட்டத்தின் சமூக ஊடகப் பக்கங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, பழைய பதிவுகள் நீக்கப்பட்ட விவகாரத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. இத்திட்டத்திற்கான பிரத்யேக சமூக ஊடகப் பக்கங்களில் லட்சக்கணக்கான மாணவர்களின் வெற்றிக் கதைகளும் பதிவுகளும் இடம் பெற்றிருந்தன. 

இந்நிலையில், தற்போதைய புதிய அரசால் அந்தச் சமூக ஊடகப் பக்கங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, அதிலிருந்த பழைய பதிவுகள் அனைத்தும் அதிரடியாக நீக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் நான் முதல்வன் சமூக ஊடக பக்கங்களின் பெயரை மாற்றலாம்; அதில் இருந்த பதிவுகளை நீக்கலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும், பயனடைந்த மாணவர்களின் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து ஒருபோதும் நீக்கவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாகப் பத்திரப்படுத்தப்பட்டு (Archive) விட்டன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில், "கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் மாணவர்களிடம் 'படிங்க, படிங்க, படிங்க' என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உதவத்தான் 'நான் முதல்வன்' எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். தற்போதைய சூழலில் அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" என்று தற்போதைய அரசுக்கு ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory