» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்

செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

மின்தடை பிரச்சினை தொடர்பாக எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள். எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன். 'நாட்டாமை', 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', 'நட்புக்காக' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் 'விழா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அண்மையில் வெளியான '29' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் சென்னையில் நிலவி வரும் மின்தடை பிரச்சினை குறித்து பேசிய மாஸ்டர் மகேந்திரனின் கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. "சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா?", "தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள்" என அவர் பேசியதாக பரவிய காணொளிகள் பலரது எதிர்ப்பை கிளப்பின. இதையடுத்து, "மின்சாரம் இல்லாமல் ஒரு மாதம் வாழ முடியுமா?" என பலரும் கேள்வி எழுப்பியதுடன், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து பதிவுகளும் வெளியாகின.

இந்த நிலையில், தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறுகிய காணொளிகளில் தாம் கூறிய கருத்துகள் முழுமையாக இடம்பெறுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. மின்சாரத் தேவையை சமாளிக்க சூரிய ஒளி மின்சாரமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பதையும், கொச்சி விமான நிலையம் போன்று நம் மாநிலத்திலும் சூரிய ஒளி மின்சார திட்டங்களை ஏன் விரிவுபடுத்தக் கூடாது என்பதையுமே நான் குறிப்பிட்டேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

என்னை திட்டி தீர்ப்பவர்கள் உண்மையை அறியாமல் செயல்படுகிறீர்கள். தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள். எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory