» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர், முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைந்தனர்!

சனி 6, ஜூன் 2026 4:08:18 PM (IST)

தமிழக அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேர் உட்பட 500-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட இணைப்பு நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் இந்த முக்கியப் பிரமுகர்கள் தவெகவில் இணைந்தனர். அதிமுகவின் முக்கிய முகங்களாக விளங்கிய முன்னாள் அமைச்சர்களான     உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத்,கடம்பூர் ராஜூ, பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகிய 4 முன்னாள் அமைச்சர்களும் இன்று தவெகவில் இணைந்தனர்.

அமைச்சர்களுடன் இணைந்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களான பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, சங்ககிரி சுந்தரராஜூ, வீரபாண்டி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜூ, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், சிவகாசி ராஜவர்மன், ஆற்காடு வி.கே.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட சுமார் 10 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் ஐக்கியமாகினர்.

இவர்களுடன் அதிமுகவின் பல்வேறு மட்ட அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். மேலும், திமுகவின் முன்னாள் எம்எல்ஏவான ஜெ. கருணாநிதியும் இன்று தவெகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் இருந்து தொடர்ச்சியாகப் பல்வேறு முக்கியப் பிரமுகர்களும், நிர்வாகிகளும் தவெகவை நோக்கிப் படையெடுத்து வருவது தற்போதைய அரசியல் களம் எங்கும் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தான் அதிமுகவைச் சேர்ந்த 4 நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜிநாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்திருந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பெருந்திரளான நிர்வாகிகள் தவெகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory