» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளம் பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: விஷம் கொடுத்து தூக்கிலிட்டு கொன்ற தாய், தந்தை கைது!
செவ்வாய் 2, ஜூன் 2026 8:32:18 AM (IST)
நாங்குநேரி அருகே இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. குடும்பத் தகராறில் மகளுக்கு வாயில் விஷம் ஊற்றி, தூக்கில் தொங்கவிட்டு கொடூரமாகக் கொலை செய்த தாய் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள செண்பகராமநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த நொச்சிகுளம் தெற்குத் தெருவில் வசிப்பவர் சிவன் (வயது 60). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், சுமார் 200 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி வைரம்மாள் (57). இத்தம்பதியருக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களில் மூன்று மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது.
கடைசி மகள் அமுதாவிற்கு (21) இன்னும் திருமணமாகவில்லை. அவர் வழக்கமாகத் தந்தையுடன் சேர்ந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலையில், அமுதா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தங்களது மகள் திடீரெனத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகப் பெற்றோர் சிவன் - வைரம்மாள் ஆகியோர் அக்கம் பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதனர். இது தொடர்பாக உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன், ஆய்வாளர் சுகாதேவி, சார்பு ஆய்வாளர் ஷைலு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த அமுதாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, துப்பு துலக்கினர்.
காவல்துறையினரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அமுதாவிற்கும், அவருடைய அக்காள் கணவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர், அவ்வழக்கத்தைக் கைவிடுமாறு அமுதாவைக் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் கேட்க மறுத்ததாகத் தெரிகிறது.
நேற்று முன்தினம் காலையில் இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவன் - வைரம்மாள் தம்பதியர், தங்களது மகள் அமுதாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளனர். இதில் மயக்கமடைந்த அவரை, வீட்டில் கயிற்றால் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இதனால் அமுதா துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமுதா உயிரிழந்ததும் சிவன் - வைரம்மாள் தம்பதியினர், தங்களது மகள் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டதாக அக்கம் பக்கத்தினரிடமும், உறவினர்களிடமும் தெரிவித்து நாடகமாடியுள்ளனர். எனினும், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தம்பதியினர் பெற்ற மகளையே கொடூரமாகக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி, சிவனைப் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், வைரம்மாளை நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர். நாங்குநேரி அருகே பெற்ற மகளையே பெற்றோரே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விபத்தில் இறந்த சிங்கப்பூர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:37:51 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி ஆய்வு!
புதன் 3, ஜூன் 2026 3:41:32 PM (IST)

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு: குற்றங்களைத் தடுக்க உறுதி!
புதன் 3, ஜூன் 2026 3:11:35 PM (IST)

ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கடை உரிமையாளர் கைது!
புதன் 3, ஜூன் 2026 11:23:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தங்களுக்கு கமிஷனா? – சங்கப் பொருளாளர் மறுப்பு - முதல்வருக்கு கடிதம்!
புதன் 3, ஜூன் 2026 11:14:48 AM (IST)

தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்
புதன் 3, ஜூன் 2026 10:43:39 AM (IST)


